தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. சென்னையின் பல பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து மழைநீரை அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று பல இடங்களில் தண்ணீர் இருந்ததை அகற்றி விட்டார்கள். நேற்று இரவு மேலும் பல இடங்களில் மழை பெய்தது. இருந்தும், மோட்டார் வைத்து முழுவதுமாக வெளியேற்றி அந்த பணி நடைபெற்று வருகிறது. தண்ணீரை அகற்றிய பின் அங்கு இருக்கும் சேறும் அகற்றப்பட்டு வருகிறது.
அதைத் தாண்டி திமுக சார்பில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியம், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா நான் உட்பட அனைவரும் துவங்கி இருக்கிறோம். இன்றைக்கு 4 இடங்களில் பெரிய அளவில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. அதுவும் திமுக சார்பில் நடைபெற்று வருகிறது.
தண்ணீர் தேங்கினால் அகற்ற வேண்டும் என்றீர்கள். அந்த வேலை முடிந்து விட்டது. மழைக்காலம் முடிந்ததும் சென்னையில் உள்ள சாலைகளைச் சீரமைக்கும் பணிக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மழைக்காலம் முடிந்ததும் சாலை முழுவதுமாக செப்பனிடப்படும்.
10 ஆண்டுக்காலம் அவர்கள் ஒழுங்காக வேலை செய்து இருந்தால், போன வருடம் ஏன் சென்னை அவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கப் போகிறது. ஒரு இடத்தில் கூட அவர்கள் தூர்வாரும் வேலையைச் செய்யவில்லை. இப்போதிருக்கும் முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்ததால் தான் கால்வாய்களை தூர்வார முடிந்தது. மத்திய சென்னை, தென் சென்னை போன்ற பகுதிகளில் அறவே தண்ணீர் தேங்கவில்லை. அதிமுக நன்றாகச் செய்திருந்தால் கடந்த ஆண்டு ஏன் தண்ணீர் நிற்க வேண்டும். அது அவர்களுக்கு தெரியாதா?
முதலைச்சர் தொகுதி கன்னித்தீவு மாதிரி இருக்கிறது என ஜெயக்குமார் சொல்லுகிறார். முதல்வர் நொடிக்கு நொடி கொளத்தூரை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார். அதனால் ஜெயக்குமார் தன் இருப்பைக் காட்டிக் கொள்கிறார். அதிமுக எதுவும் செய்யாததால் தானே தண்ணீர் நின்றது. நாங்கள் வேலை செய்ததால் தண்ணீர் வடிந்து விட்டது. ஜெயக்குமார் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.