வரி பாக்கியில் 10 கோடியை மூன்று தவணைகளில் செலுத்த வேண்டும் என்று அடையார் கேட் ஒட்டலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் அடையார் கேட் ஐந்து நட்சத்திர ஓட்டல் ரூ 24 கோடி சொத்து வரி செலுத்தவில்லை என்று மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அடையார் கேட் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 24 கோடியில் முதல் கட்டமாக 10 கோடி ரூபாயை எப்போது செலுத்த முடியும் என்று பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி துரைசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓட்டல் சார்பில் ஆஐரான வழக்கறிஞர், இன்னும் இரண்டு நாட்களில் 2 கோடி செலுத்தி விடுவதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் ஒரு கோடி செலுத்துவதாகவும், மீதி 6 கோடியை செலுத்த இரண்டு மாத கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், தவணை முறையில் செலுத்த அனுமதி கொடுத்தால் அது ஒரு தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்றார். இதற்கு நீதிபதி 8 ஆண்டுகளாக எந்த பணமும் கிடைக்காமல் இருந்ததற்கு பதிலாக இப்போது 10 கோடி பணம் வருகிறதே என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி 10 கோடியில் மூன்று கோடி ரூபாயை வரும் 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், மீதி ஏழு கோடி ரூபாயில் 3.5 கோடியை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்ளும், அடுத்த 3.5 கோடி ரூபாயை மே 30 ஆம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.