![adultered jaggery fssai officers raid in salem district](http://image.nakkheeran.in/cdn/farfuture/O3WsXxf_tSmdoT3vC-GoT1g1yDAqUtT2i3nDxjQ5Hzc/1604639815/sites/default/files/inline-images/adultered%20jaggery_0.jpg)
சேலம் அருகே, 2 டன் கலப்பட வெல்லத்தை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர், கருப்பூர், இடைப்பாடி, காடையாம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெல்லம் தயாரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் வெல்லம் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டியில் சில ஆலைகளில், வெல்லம் 'பளிச்' என்று தெரிவதற்காக செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதாக சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் உத்தரவின்பேரில், உணவுப்பாதுகாப்பு அலுவலர் புனிதராஜ், காடையாம்பட்டி பகுதியில் உள்ள நான்கு வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது ஒரு ஆலையில் இருந்து கலப்பட வெல்லம் தயாரிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த ஆலைக்குள் 70 மூட்டைகளில் 2 டன் கலப்பட வெல்லம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், அந்த ஆலையில் இருந்து 500 கிலோ சர்க்கரை, சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அங்கு சேகரிக்கப்பட்ட கலப்பட வெல்லத்தின் மாதிரிகள், பகுப்பாய்வு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸூம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''காடையாம்பட்டியில் உள்ள குறிப்பிட்ட ஒரு வெல்லம் தயாரிக்கும் ஆலைக்குள் அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றிருந்தபோது ஆலை உரிமையாளர் ஒருவர், அதிகாரிகளை ஆலைக்குள் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் ஆலை உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அந்த ஆலையில் ஆய்வு செய்தோம். அங்கிருந்து 2 டன் கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
கலப்பட வெல்லத்தை உண்பதால் அல்சர், குடல் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கலப்பட வெல்லம் தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.