சேலத்தில், சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக்கொண்டு தலைமறைவான அதிமுக பிரமுகரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதன் பின்னணியில் ஆளுங்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டது. அதன்பேரில், சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால், திடீரென்று மேற்சொன்ன பணியிடங்களை நிரப்பும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர், சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களைப் பெற்றுத் தருவதாகச் சொல்லி பலரிடம், ஒவ்வொரு பணியிடத்திற்கும் 2 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும், அத்தகவல் வெளியானதன் பேரிலேயே மேற்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.
ஆனால், ஆளுங்கட்சி புள்ளிகள் பணம் வசூலித்துக்கொண்டதோடு, இதுவரை வேலையும் வாங்கித் தரவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில்தான், சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி மோகனாம்பாள் (31), மல்லூர் அருகே உள்ள வேடுகாத்தான்பட்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் தினேஷ் என்பவர், தன்னிடம் சத்துணவு பணியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3.50 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக மல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் அம்சவள்ளி விசாரணை நடத்தினார். புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, தினேஷ் மீது மோசடி செய்ததாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்கிடையே அவர் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். முதற்கட்ட விசாரணையில் தினேஷ், நான்கு பெண்களிடம் தலா 3.50 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 14 லட்சம் ரூபாய் வசூலித்துவிட்டு மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
ஆனால், புகார்தாரர்கள் தரப்பில் அவர் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துவிட்டு ஓட்டம் பிடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னணியில் அதிமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலருக்கு நேரடி தொடர்பு இருப்பதாகப் பேசப்படுகிறது. தினேஷ், காவல்துறை வசம் சிக்கும்பட்சத்தில், அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள் மீதும் வழக்குப் பாயும் எனத் தெரிகிறது.
தேர்தல் நெருக்கத்தில் இப்படியொரு மோசடி புகார் எழுந்துள்ள சம்பவம், சேலம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.