![admk leader car incident in trichy](http://image.nakkheeran.in/cdn/farfuture/G4FfpSeATF-DdGuqlyU9KfwkRKx0TxRLfibj_fsqrHU/1655018213/sites/default/files/inline-images/car434322.jpg)
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், அ.தி.மு.க.வின் ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் சூப்பர் நடேசன். முன்னாள் அ.தி.மு.க. எம்.பி.யான ப.குமாரின் ஆதரவாளரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் யார் பெரியவர் என பனிப்போர் நிலவி வருகிறது.
இந்த நிலையில் நேற்று (11/06/2022) சூப்பர் நடேசன் வழக்கம்போல் தனது காரை வீட்டின் எதிரே நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுவிட்டார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து சூப்பர் நடேசன், சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "உட்கட்சிப் பூசல் காரணமாக தனது கார் அடித்து நொறுக்கப்பட்டது. காரை சேதப்படுத்திய நபர்களை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.