அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு செல்லூர் ராஜூ பதிலளித்ததிலிருந்து, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் ஜெயக்குமார் என ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளைக் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ராயப்பேட்டை தலைமை அலுவலத்தில் செய்தியாளரை சந்தித்த கே.பி.முனுசாமி, “அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது என பாஜக தலைவர் முருகனே கூறிவிட்டார். சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து தற்போது ஆலோசனை மேற்கொண்டோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்” என்றார்.