![admk chief and former cm of tamilnadu opanneerselvam statement](http://image.nakkheeran.in/cdn/farfuture/4pRTtr-CpgQ0_9I7VffpHzP4xgvNjVLn2dIVBEFrPhc/1623428370/sites/default/files/inline-images/OPS.%20%281%29_0.jpg)
கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு ஆமை வேகத்தில் செல்வதாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (11/06/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி, செங்கல்பட்டில் தடுப்பூசி தொழிற்சாலை என தடுப்பூசிக் குறித்து தமிழகத்தில் பரபரப்பாகச் செய்திகள் வந்துக் கொண்டிருந்தாலும், தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
07/06/2021 அன்று நிலவரப்படி, அகில இந்திய அளவில் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் 38 விழுக்காடு நபர்கள் ஒருமுறை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும், திரிபுராவில் 92 விழுக்காட்டினரும், இமாச்சல பிரதேசத்தில் 77 விழுக்காட்டினரும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், கோவா, குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் 50 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தை விட பின்தங்கிய மாநிலங்களான பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் கூட 24 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தான் வெறும் 19 விழுக்காடு மக்கள் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் கடைசி இடத்தை வகிக்கிறது.
45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோருக்கு இணை நோய்கள் இருப்பதால், இந்தப் பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது தவிர்க்க முடியாததாகக் கருதப்படுகிறது. மூன்றாவது அலை வருவதற்குள் இந்தப் பிரிவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டால் தான் வருங்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பிரிவிலேயே 19 விழுக்காடு அளவுக்குத்தான் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது என்றால், 18 முதல் 44 வயது வரையிலான பிரிவில் இதைவிட குறைவான அளவுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும். அதே சமயத்தில், தமிழகத்தை விட மக்கள் தொகை குறைந்த மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் அதிக அளவில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம் மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சக இணையதளத்திலிருந்து தெரிய வருகிறது.
மேற்படி புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவதில் தமிழகத்தில் சுணக்கம் இருப்பதாகத் தெரிய வருகிறது.
எனவே, தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி, தேவைப்படின் புள்ளி விவரங்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து விரிவாக எடுத்துரைத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.