சேலத்தில் திமுக பிரதிநிதியைத் தாக்கியதாக அதிமுக வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.
சேலம் அன்னதானப்பட்டி இரட்டைக்கிணறு பகுதியில் சாக்கடைக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருந்தது. அப்போது திமுக பிரதிநிதி சின்னையன் (64) என்பவர், அங்கு சென்று சாக்கடை கால்வாய் அடைப்பைச் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்? என்றும் அப்போது கேட்டுள்ளார்.
அப்போது, சேலம் மாநகராட்சி 58வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாண்டியன் நிர்வாகிகளுடன் வந்து, என் பகுதியில் நீ ஏன் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்கிறாய் எனக்கேட்டு சின்னையனிடம் தகராறில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் பாண்டியன், திமுக பிரமுகரை தாக்கினார். காயம் அடைந்த சின்னையன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் அதிமுக கவுன்சிலர் வேட்பாளர் பாண்டியனை கைது செய்தனர். அப்போது அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் மற்றும் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கைதான பாண்டியனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவிடாமல் காவல்துறை வாகனத்தின் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை துணை ஆணையர் மோகன்ராஜ், உதவி ஆணையர் அசோகன், ஆய்வாளர் சந்திரகலா மற்றும் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாண்டியனை காவல்துறையினர் சேலம் 1வது நீதித்துறை நடுவர் பொன் பாண்டியன் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து அவரை மார்ச் 1ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும், அவருக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அடுத்து, பாண்டியன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சேலம் 4வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் அவரை ஜாமினில் விடுவிக்கக் கோரி அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு மீது புதன்கிழமை (பிப். 16) காலையில் விசாரணை நடந்தது. பாண்டியனுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனினும், தினமும் காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பாண்டியனுக்கு ஜாமின் வழங்கி நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.