திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களை சேர்ந்த கிராம மக்கள் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற்றனர்.
ஆத்தூர் தொகுதியை இளைஞர்கள் தங்களுக்கு அரசுப் பணி வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்த போது அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட பின்பு அவர்கள் மத்தியில் பேசிய ஐ.பெரியசாமி, “இந்தியாவிலேயே குறிப்பாக தமிழகத்தில் இதுவரை ஒரே தொகுதியை சேர்ந்த 115பேருக்கு அரசு நியாய விலை கடைபணியில் ஒரு பைசா செலவில்லாமல் இல்லம் தேடி சென்று பணிகளை வழங்கியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களின் கிராமத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கிராமத்தில் செயல்படுத்த வேண்டிய நலத்திட்டங்களை கோரிக்கை மனுவாக கொடுத்தால் அவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் திமுகவினர் சமத்துவ பொங்கல் வைத்து கிராமங்கள்தோறும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோல அனைத்து கிராமங்களிலும் கிராமப்புற இளைஞர்கள் ஒற்றுமையுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும். 100நாள் வேலைத் திட்டம் மூலம் கிராமங்களை மேம்படுத்த கூடிய பணிகள் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் கிராமங்களை மேம்படுத்த நலத்திட்ட பணிகள் நடைபெற உள்ளது. அனைத்து கிராமங்களிலும் அங்கன்வாடி மையங்கள் புதுப்பிப்பதோடு புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தரமான உயர்தர கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருவதால் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு துவக்கப் பள்ளிகளும் நடுநிலைப் பள்ளிகளும் மேம்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராம மக்கள் அரசுப் பள்ளியை விரும்பும் நிலை உருவாகி வருகிறது. அதற்கு காரணம் மு.க.ஸ்டாலின்” என்றார்.
நிகழ்ச்சியின்போது தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, திண்டுக்கல் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, அகரம் பேரூராட்சிமன்ற தலைவர் நந்தகோபால், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சீவல்சரகு ராணிராஜேந்திரன், அகரம் பேரூர் கழக செயலாளர் ஜெயபால், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் பொன்முருகன், மாவட்ட தகவல்தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் பாறைப்பட்டி வாஞ்சிநாதன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கும்மம்பட்டி விவேகானந்தன், பஞ்சம்பட்டி மணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பண்ணைப்பட்டி அருண், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர்கள் நெல்லை சுபாஷ், ஆனந்த், ஜான்பீட்டர், சக்தி, திமுக நிர்வாகிகள் நந்தி நடராஜன், நரசிங்கம், வீரபாண்டி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.