அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கட்சியின் நிர்வாகிகளுடன் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மூத்த நிர்வாகிகளுடன், ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டிருப்பதாகத் தகவல் கூறுகின்றன.
இந்தநிலையில், அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொண்டர்கள் முழக்கமிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த தாக்குதலில் கட்சி நிர்வாகி ஒருவர் காயமடைந்தார்.
ரத்த காயத்துடன் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளரும், பெரம்பூர் பகுதிச் செயலாளருமான மாரிமுத்து, எடப்பாடி ஆளா? என்று கேட்டுத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதன் பிறகு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், பொதுக்குழுவில் நிறைவேற்றக்கூடிய தீர்மானத்தை யாராவது, எந்த கட்சியாவது முன்னரே சொல்வார்களா? மூத்த தலைமைகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் விரைவில் நல்ல முடிவு வரும். வரும் 23 ஆம் தேதி வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'சார் ஓபிஎஸ்சுக்கு அவர் சமூகத்து ஆட்களே ஆதரவு தரவில்லை என்கிறார்களே?' என்ற கேள்வியை முன் வைக்க அதற்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார், ''இது அண்ணா திமுக தம்பி... அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சாதி, சமயம், இன வேறுபாடுக்கு அப்பாற்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம்'' என்றார்.