ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் அறநிலை துறை சார்பில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் இரண்டு நாட்களுக்கு வெகு விமர்ச்சியாக நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற இந்து சமய அறநிலைத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடத்திடத் தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தான் அறநிலைதுறை அமைச்சர் சேகர்பாபு உடனடியாக பழனிக்கு விசிட் அடித்து, அமைச்சர் அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமார், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, காவல்துறை கண்காணிப்பாளர், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டவர்களோடு ஆலோசனை செய்து மாநாட்டுப் பணிகளை தீவிரப்படுத்தினார். அதன்பேரில் தற்பொழுது பணிகள் முடிந்து மாநாடும் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு பழனி திண்டுக்கல் சாலையில் உள்ள பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும், உலக அளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும், ஆதீனங்களும் மற்றும் வெளிநாட்டுப் பக்தர்களும் கலந்துகொள்ள உள்ளன. அதையொட்டி தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மாநாடு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
மாநாட்டில் குன்று போல் மலை வடிவமைத்து அதன் மேல் முருகன் இருப்பது போலவும் மற்றும் பல வகையான சாமி சிலைகளும் மிகப்பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இறுதிக் கட்ட பணிகளைப் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் பார்வையிட்டார். அதோடு பணிகள் குறித்தும் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கவனத்திற்கும் கொண்டு சென்று இருக்கிறார்.
முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அதோடு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது அனுமதியும் இலவசம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்திருக்கிறார். அதோடு மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. மாநாட்டினை காண வரும் பொதுமக்கள் மாநாடு தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 04545 241 471, 1800 425 99 25 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டுப்பெறலாம்.