இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் இன்று (02-09-23) காலை 11.50 மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்டவுன் நேற்று (01-09-23) காலை 11.50 மணிக்குத் தொடங்கி இன்று காலை 11.50க்கு நிறைவடைந்து விண்ணை நோக்கிச் சீறிப் பாய்ந்தது. சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் சுமந்து செல்லும் ஆதித்யா எல்-1 விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டது. இது பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் சி57ல் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்ததுள்ளது இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவிக்கையில், “புவி சுற்று வட்டப் பாதையில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது. சரியாக 648 கி.மீ. உயரத்தில் ராக்கெட்டில் இருந்து ஆதித்யா விண்கலம் தனியாகப் பிரிந்தது. ஆதித்யா எல்-1 விண்கலம் சரியான சுற்று வட்டப் பாதையில் செல்கிறது. அடுத்தடுத்த சுற்றுகளைக் கடந்து மிக நீண்ட தூரப் பயணத்திற்குப் பின் எல்-1 புள்ளியை அடையும்” எனத் தெரிவித்தார்.
அதே சமயம் தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், செங்கோட்டை கலைமான் நபி பள்ளிவாசல் ஜமாத் பகுதியைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான நிகர் ஷாஜி, சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக உள்ளார். இவர் இது குறித்து தெரிவிக்கையில், “ஆதித்யா எல்-1 விண்கலம் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. விண்கலத்தின் சூரிய மின் தகடுகள் சரியாக செயல்படத் தொடங்கியுள்ளன” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து கனிமொழி எம்.பி. இஸ்ரோவிற்கும், ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் முயற்சியான அதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, புவி சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விண்வெளி அறிவியலில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துகள்.
சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா எல் - 1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த நிகர் ஷாஜிக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.