Published on 20/10/2020 | Edited on 20/10/2020
வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் பசுமை அங்காடிகள் மூலம் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை ரூபாய் 45- க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் நாளை (21/10/2020) முதலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் நாளை மறுநாள் (22/10/2020) முதலும் பசுமை அங்காடிகள் மூலம் பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 45- க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முதற்கட்டமாக 75 டன் எகிப்து பெரிய வெங்காயம் கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்காக வந்துள்ளது.