நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன கணக்காளரின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தன்னுடைய தந்தையைத் தொடர்ந்து, சில படங்களைத் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் இயங்கும் இந்த நிறுவனம், சென்னை, வடபழனி, குமரன் காலனியில் உள்ளது. இதில், சாலிகிராமத்தைச் சேர்ந்த ரம்யா என்பவர், பெண் கணக்காளராக கடந்த 5 வருடங்களாகப் பணியாற்றி வந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதலே விஷால் பிலிம் பேக்டரி, வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய டி.டி.எஸ். தொகையில் இருந்து பணம் காணாமல் போவதாகக் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், இது குறித்து சோதனை செய்ததில், கணக்காளர் ரம்யா அரசுக்கு கட்ட வேண்டிய டி.டி.எஸ். தொகையை, தன்னுடைய கணவரின் வங்கிக் கணக்கிற்கும், குடும்ப உறுப்பினர் ஒருவருவரின் வங்கிக் கணக்கிற்கும் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரி கிருஷ்ணன், இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மோசடி செய்த ரம்யாவை கைது செய்ய வேண்டும் என்றும், மோசடி செய்த 45 லட்ச ரூபாயைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதனடிப்படையில், கணக்காளர் ரம்யா மீது, மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரம்யா முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, ரம்யாவின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.