Skip to main content

"அபராதத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்க விருப்பமில்லை" - விஜய் தரப்பு நீதிமன்றத்தில் தகவல்

Published on 28/07/2021 | Edited on 28/07/2021
Actor Vijay's luxury car case ... Postponed without mentioning the date after the judge's opinion

 

கரோனா நிவாரண நிதியாக அரசிடம் 25 லட்சம் ரூபாயை ஏற்கனவே கொடுத்துள்ளதாகவும், அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை நிவாரண நிதியாகக் கொடுக்க விருப்பமில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன்பு விஜய் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காருக்கான  நுழைவு வரியை எதிர்த்து, நடிகர் விஜய்  வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். 

 

மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் ஹேமலதா அமர்வு, நடிகர் விஜய்க்கு 1 லட்சம்  ரூபாய் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். 

 

மேலும், நுழைவு வரி பாக்கியை வசூலிக்க வணிக வரித்துறைக்கு செலான் பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், நடிகர் விஜய் வழக்கு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தது. அப்போது  விஜய் தரப்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, ஒரு லட்சம் ரூபாயை கரோனா நிவாரண நிதியாக தமிழக அரசிடம் ஏன் வழங்கக்கூடாது எனக் கருத்து தெரிவித்தார். அதற்கு விஜய் தரப்பில், ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக கடந்த ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை கரோனா நிவாரண தொகையாக வழங்க விருப்பமில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கைத் தனி நீதிபதி தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
 

 

சார்ந்த செய்திகள்