‘புஷ்பா 2 - தி ரூல்’ படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகியிருந்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது, அங்கு எந்த முன் அறிவிப்புமின்றி அல்லு அர்ஜூன் சென்றார். திடீரென அவரை பார்த்ததால் ரசிகர்கள் அனைவரும் அவரை நோக்கி ஓடினார். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (வயது 39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இன்றி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அல்லு அர்ஜூன் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தருவதாக உத்தரவாதம் கொடுத்தார். மேலும் சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே அல்லு அர்ஜூன் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இத்தகைய சூழலில் தான் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுவனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தார். 14 நாட்களாக சிகிச்சையில் இருந்த சிறுவனும் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவடைந்தார். அதே சமயம் தியேட்டரில் நெரில் ஏற்பட்டது குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என அல்லு அர்ஜூன் நேற்று (21.12.2024) பேட்டி அளித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை ஐதராபாத் காவல் உதவி ஆணையர் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நீதி கேட்டு நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன்பு போராட்டம் நடைபெற்றது. உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் கூட்டு நடவடிக்கை குழு மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் உயரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து அல்லு அர்ஜுன் வீட்டின் முன் இருந்த பூந்தொட்டிகளை போராட்டக்காரர்கள் உடைத்தனர். அதோடு அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல், தக்காளி உள்ளிட்ட பொருட்களையும் போராட்டக்கார்கள் வீசினர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.