சென்னை, மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் 20.12.2024 தொடங்கிய இந்த உணவுத் திருவிழா நாளை மறுநாள் (24.12.2024) வரை நடைபெறுகிறது. மதியம் 12.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை செயல்பட்டு வருகிறது. இதனையொட்டி ஏராளமான உணவு பிரியர்கள் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த உணவுத் திருவிழாவில், கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், தருமபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி, சிவகங்கை மட்டன் உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை, மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு, மயிலாடுதுறை இறால் வடை, நாகப்பட்டினம் மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம் பொறி, சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் உணவு திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? என நீலம் பண்பாட்டு மையம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அம்மையத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன?. பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிடக் கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவைப் புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை” எனக் குறிப்பிட்டுள்ளது.