கடந்த 2015, ஏப்ரல் மாதம் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி பேராசிரியை கிருஷ்ணவேணி, அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக ஜெய் என்கிற கதிரவன், ஜீவா என்கிற ஜீவானந்தம் ஆகியோரும், மேலும் இரண்டு சிறார்களும், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டனர். குற்ற பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் நடந்துவருகிறது. ஒன்பது சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, ஆறு ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருவண்ணாமலை நீதிமன்ற வழக்கின் விசாரணையை, திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என ஜெய், ஜீவா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருவர் தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர், ‘புகார்தாரரான ஜெயவேல் (கிருஷ்ணவேணியின் தம்பி) திருவண்ணாமலையில் வழக்கறிஞர் தொழில் செய்து வருவதால், தங்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராகக்கூடாது என வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். விழுப்புரத்திலிருந்து ஆஜராக வந்த வழக்கறிஞரையும் ஆஜராகவிடாமல் தடுத்துள்ளனர். எனவே, வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது என்பதால், விசாரணையை மாற்ற வேண்டும்’ என வலியுறுத்தினார்.
காவல்துறை தரப்பில், ‘வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், அவர்களுக்கு எதிராக பிணையில் விட முடியாத பிடியானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாட்சிகளை விழுப்புரத்திற்கு வரவழைத்தால், வீண் மன உளைச்சல் ஏற்படும்.’ என்று தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணவேணியின் சகோதரர் ஜெயவேலு தரப்பில், வழக்கறிஞர் சங்கத்தில் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றவோ, மற்ற வழக்கறிஞர்களை நீதிமன்ற பணி செய்ய விடாமல் தடுக்கவோ இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 2015-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், 2019-லிருந்து சாட்சிகள் விசாரணை நடந்து வருவதால், வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவே, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிடியாணை, கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, வழக்கு விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், கிருஷ்ணவேணி கொலை வழக்கின் விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.