நெல்லை மாவட்டம் பாபநாசம் ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில். ஒவ்வொரு ஆண்டு ஆடித் திருவிழாவும் இங்கே களைக்கட்டும். அதிகப்படியான பக்தர்கள் இங்கே வருவார்கள். மேலும் இந்த கோவில் வனப்பகுதிக்கு உட்பட்ட இடத்தில் இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மது, புகையிலை, சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டுவரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவிழா நேரத்தில் அரசு பேருந்துகளில் மட்டுமே அந்த கோவிலுக்குச் செல்ல முடியும்.
இதனால் பாபநாசம் வன சோதனை சாவடி, காணிக்குடி சோதனை சாவடி எனப் பல இடங்களில் சோதனை நடைபெறும். இந்நிலையில் இந்த திருவிழாவிற்கு மதுவைக் காலில் டேப் போட்டு ஒட்டி எடுத்து வந்த நபர்களை வனத்துறையினர் பிடித்து அவர்கள் கொண்டுவந்த மதுவை அவர்களது கையாலேயே கீழே ஊற்றி அழித்தனர். மதுவை பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்களில் அடைத்து அதனை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் டேப்பை வைத்து முழங்காலில் சுற்றி ஒட்ட வைத்து எடுத்துவந்ததும், வனத்துறையினர் சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது. 'இப்படியெல்லாம் கடத்தி வந்து குடிக்க சொல்லுதா' என அங்கிருந்தவர்கள் சிரித்துக்கொண்டே சென்றனர்.