நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் 'கரோனாவிலிருந்து எங்களை, சென்னையை காக்க வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என ஒட்டப்பட்ட நோட்டீஸால் சர்ச்சை எழுந்தது.
சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து ஒட்டிய கரோனா நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இது குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில் "கமல்ஹாசன் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்று வந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. கமலின் பழைய முகவரி என தெரியாமல் பாஸ்போர்ட் முகவரியை கொண்டு நோட்டீஸ் ஒட்டினர். கமல்ஹாசன் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் கரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதில் சின்ன தவறு நடந்து விட்டது. கமல் வீட்டில் கரோனா நோட்டீஸ் ஒட்டி பின்னர் அகற்றப்பட்டது. இனிமேல் இதுபோன்ற சிறிய தவறு நடக்காது" என்றார்.