தீபாவளி பண்டிகை முன்னிட்டு அதிகப்படியான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ''வழக்கமாக இயங்குகின்ற 2,100 பேருந்துகளை தவிர்த்து நாளை 1,586 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 1,195 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. எனவே ஒட்டுமொத்தமாக சென்னையிலிருந்து 10,518 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. கடந்த வருட தீபாவளியில் முன்பதிவு செய்து பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 87 ஆயிரம் பேர். இந்த வருடம் இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து தங்களுடைய பயணத்தை உறுதி செய்து இருக்கிறார்கள்.
எனவே கடந்த ஆண்டு வரை இந்த ஆண்டு முன்பதிவு என்பது கூடுதலாகி இருக்கிறது. அதேபோல பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையும் கூடுதலாகும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கூடுதலான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி இன்னும் தேவை என்றால் வழக்கமான எண்ணிக்கையை தாண்டி தேவையான பேருந்து வசதிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மாநகரத்திற்குள்ளாக பல்வேறு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக 150 பேருந்துகள் அந்த பகுதிகளில் மாத்திரம் இயக்கப்படுகிறது. இன்றைக்கு காலையிலிருந்து பயணிகள் அதிகமானோர் தங்கள் பயணத்தை தொடங்கி உள்ளதால் பெரிய அளவில் நெரிசலின்றி செல்கிற காட்சியை நம்மால் பார்க்க முடிகிறது. இரவு வரை நெரிசலில்லாமல் இதே போல் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெரிய அளவில் புகார்கள் இல்லை. இருந்தாலும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். போக்குவரத்துதுறை ஆணையர் மற்றும் அலுவலர்களும் அதை ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்கிற பணியில் இருக்கிறார்கள். நிச்சயமாக கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.