மக்கள் நீதி மையத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை திருவாரூர் தெற்கு வீதியில் நடத்தி அரசியல் பார்வையை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
திருவாரூரை தேர்வு செய்ய காரணம் தமிழகத்துக்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர் என்பதாலும், குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்றும்தான் தேர்வு செய்தோம் என்று பேசினார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் சமீப காலமாக திமுகவையும், அதிமுகவையும், பாமகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த வகையில் இன்று திருவாரூர் தெற்கு வீதியில் நடந்த கூட்டத்திலும் மறைமுகமாகவே அனைத்து கட்சிகளையும் சகட்டுமேனிக்கு சாடினார், திமுகவை சற்று அதிகமாகவே விமர்சித்து பேசியது திருவாரூர் நகர்வாழ் மக்களை சங்கடப்படவைத்தது.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை மதுரையில் கடந்த ஆண்டு 2018ம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கினார். அப்போது எப்போது தேர்தல் வந்தாலும் சந்திப்போம் என்றும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அதற்கேற்ப பாண்டிச்சேரியில் கட்சி கொடியை அறிமுகம் செய்து தேர்தலுக்கான கட்சி கட்டமைப்பை செய்துவந்தார், கட்சி துவங்கி இன்று ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு நாகைக்கு வந்தார், அங்கு புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் 159 குடும்பங்களுக்கு வலைகளை வழங்கினார்.
அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் தெற்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சியின் ஓராண்டு நிறைவு மற்றும் துவக்கவிழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு திமுக அதிமுக பாமக என அனைத்து கட்சிகளையும் தனக்கே உரிய பாணியில் விமர்சித்து பேசினார்.