ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் மற்றும் தனிநபருக்கு சொந்தமான அரிசி மண்டியில் கடந்த 2- ம் தேதி இரவு 11 மணியளவில் பெட்ரோல் நிரப்பப்பட்ட திரியுடன் கொண்ட பாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் வீசி சென்றனர். இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் 7 தனி படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், சரித்திர பதிவேடு கொண்ட தமிழரசன் என்பவரின் மகன் ஹரி கடந்த 3 ஆம் தேதி காவல்துறையால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தனது தந்தை மீதும், தன் மீதும், தனது கூட்டாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான் ஹரி, பரத் மற்றும் விஷால் ஆகியோரை கைது செய்தனர். இதில் பரத் மற்றும் விஷால் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், குண்டடிப்பட்ட ஹரி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த குற்றச் சரித்திர பதிவேடுகொண்ட தமிழரசன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில், தனிப் பிரிவு காவல்துறையினால் தமிழரசனை பிடிக்க முயற்சி செய்தபோது அவர் தப்பிக்க முயற்சி செய்து ஓடியபோது நிலை தடுமாறி விழுந்ததால் கை மற்றும் கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் மாவு கட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நான்கு பேரைக் கைது செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.