ஆன்மீகத்தில் படைத்தல் கடவுள் எனப்படும் பிரம்மன், காத்தல் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையே நீ பெரியவனா நான் பெரியவனா என்கிற மோதல் வந்து பஞ்சாயத்து அழிக்கும் கடவுளான சிவனிடம் சென்றது. தன்னை தீ பிழம்பாக்கி நின்ற சிவன், என் பாதத்தை ஒருவரும், தலை உச்சியை நோக்கி ஒருவரும் சொல்லுங்கள். யார் முதலில் கண்டு விட்டு வருகிறீர்களோ அவர்களே வலிமையில் பெரியவர் என்றார் சிவன். இருவரும் தோல்வியை சந்தித்தனர். முடியை கண்டதாக பிரம்மனுக்காக பொய் சொன்னது தாழம்பூ.
அதனால் பூஜை பொருளில் இனி தாழம்பூ இருக்காது எனவும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்காது எனவும் சாபம்மிட்ட சிவன், நம்மில் பலத்தில் யாரும் பெரியவரில்லை, இங்கு அனைவரும் சமம் என பிரம்மன், விஷ்ணுவின் அகங்காரத்தை ஒழித்தயிடம், தீ பிழம்பாக நின்றயிடம் திருவண்ணாமலை என்பதால் இது அக்னி தலம் என அழைக்கப்படுகிறது. பின்னர் இந்த அக்னி மலையாக இருந்தது பின்னர் தங்கமலையானது, பின்னர் வெள்ளி மலையாகி, தற்காலத்தில் கல்மலையாக சிவன் காட்சியளிக்கிறார் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.அப்படிப்பட்ட திருவண்ணாமலை தலத்தில், அண்ணாமலையார் கோயிலுக்குள் அதிகார பலம் என்கிற பந்தாவோடு வந்தவர்கள் யாரும் அதன் பின்னால் சிறப்பாக இருந்ததில்லை என்பதே இந்த தலத்தின் தற்கால வரலாறு என்கிறார்கள் நீண்டகால சிவ பக்தர்கள்.
தீபத்திருவிழாவில் நடைபெறும் சில செயல்பாடுகளை கண்டு பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளவர்கள் இதுப்பற்றி நம்மிடையே பேசும்போது, இந்து மதத்தின் ஒப்பற்ற தலைவர் என தன்னை வெளியுலகத்துக்கு காண்பித்துக்கொண்ட காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதியாக இருந்த மறைந்த ஜெயந்திரர், தற்போதைய பீடாதிபதி விஜயேந்திரர் இருவரும் தங்களது ஆட்களுடன், 2003- ஆம் ஆண்டு மகாதீபத்தன்று மகாதீபத்தை காண கோயிலுக்குள் வந்தனர். தனியாக சிறப்பு சிம்மாசனம் போட்டு அவரை அமர வைத்தார்கள். கோயிலுக்குள் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் தன்னுடனை பெருங்குரலால் அண்ணாமலையாரை போற்றி பாடல்களை பக்தியோடு பாடிக்கொண்டுயிருந்தார். 5.30 மணிக்கு பித்துக்குளி முருகதாஸ் பாடுவதை நிறுத்தச்சொல்லிவிட்டு பக்தர்களுக்கு அருளாசி சொற்பொழிவு ஆற்றத்துவங்கினார் ஜெயந்திரர். அதற்கடுத்த ஆண்டு காஞ்சி சங்கரராமன் படுகொலை வழக்கில் ஜெயேந்திரன், விஜயேந்திரர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
அதிமுக அமைச்சர்களாக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, கோகுலஇந்திரா உட்பட பலர் அமைச்சர்களாக இருந்தபோது அமைச்சர்கள் என்கிற அதிகாரத்தோடு பந்தாவாக கோயிலுக்குள் வலம் வந்து இன்று அரசியலில் இருக்குமிடம் இல்லாமல் போய்வுள்ளார்கள். ஒருக்காலத்தில் தற்போது அமைச்சராக உள்ள செங்கோட்டையனும் அப்படி காணாமல் போய் மீண்டு வந்தவர் தான்.
2002ல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது பெரும் நிதி வழங்கியவரும், பின்னர் அறங்காவலர் குழு தலைவராக இருந்த பெரும் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, பல நெருக்கடிகளை சந்தித்தார்.
2017யில் திருவண்ணாமலை கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அது, அண்ணாமலையார் தனது தந்தையாக ஏற்றுக்கொண்ட வல்லாளமகாராஜா இறந்த துக்கத்தில் இருந்த காலக்கட்டமாக அதனை கோயிலில் கடைப்பிடிப்பார்கள். அந்த நேரத்தில் கோலாகலமாக கும்பாபிஷேகம நடப்பதை சிலர் எதிர்த்தனர். அந்த ஏற்பாடுகள் நடைபெற்ற போதே, கும்பாபிஷேகத்துக்கு முன்பே தேதியை முடிவு செய்த முதல்வராக இருந்த ஜெ, நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இறந்துப்போனார். அவருடைய தோழி சசிகலா, சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றார். அறநிலையத்துறையின் ஆணையாளராக இருந்த தனபால் உட்பட முக்கிய அதிகாரிகள் சிலை கடத்தல் விவகாரத்தில் சிக்கினார்.
அண்ணாமலையார் கோயிலுக்குள் படைவாரிங்களோடு வந்து பந்தா செய்தவர், பின்னர் அண்ணாமலையார் போல் தன் உருவத்தை உருவாக்கி வீதியுலா நடத்தி அலப்பறை செய்தார் தற்போதும் தலைமறைவாக உள்ள நித்தியானந்தா. ரஞ்சிதாவுடன் சிக்கிய பின்பும் தனது பந்தாவை விடாமல் திருவண்ணாமலையில் அலப்பறை செய்தார். 2017ல் கோயில் கும்பாபிஷேகத்தின்போது சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்பட்ட நித்தியானந்தா, தற்போது நாட்டை விட்டே ஓடிப்போனார்.
திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட அறங்காவலர் குழுவில் முக்கியமான உள்ளுர் வர்த்தகர் பெரும் நிதிநெருக்கடியில் முடங்கிப்போனார். முன்னாள் நகரமன்ற தலைவர் இருவர், கோயில் எங்களுடையது என திருவிழாக்களில் பந்தா செய்தவர்கள் அரசியல் வளர்ச்சியில்லாமல் முடங்கிப்போனார்கள்.
அகங்காரத்தோடு, அதிகார மமதையோடு தன்னை தரிசிப்பவர்களுக்கு கடவுளாக இருந்தும் பக்தனுக்கு அண்ணாமலையார் என்றுமே கருணை காட்டியதில்லை. அக்னி தலமான இங்கு அகங்காரத்தோடு வருபவர்களை சோதனைகள் தருவார் அண்ணாமலையார் என்கிறார்கள், இப்போதும் சிலர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் அக்னி உருவமான சிவன் அவர்களை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார் என்கிறார்கள் சிவ பக்தர்கள்.