விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் 20 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, குடிநீர் பிரச்சனை, 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம், மத்திய அரசின் நலதிட்ட உதவிகள் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை அவர்களிடமே நேரில் கேட்டறிந்து, சீர் செய்வதற்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் மக்களவை காங்கிரஸ் கொறடாவும், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினருமான மாணிக் தாகூர். சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்ட அவர், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றுக்கொண்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“எந்த ஒரு மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றுவது மிகவும் வருத்தத்துக்குரியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று முதல்வர்களை வீட்டுக்காவலில் வைத்து விட்டு, அமித் ஷாவும் மோடியும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை ஈடுகட்டுவதற்காக நாடகமாடி வருகிறார்கள்.
ரஜினிகாந்த், மோடி அமித்ஷா குறித்து தெரிவித்த கருத்து தவறானது. அவர்களை துரியோதனன், துச்சாதனன் என்று விமர்சனம் செய்திருக்கலாம். அல்லது ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே என்று கூறி இருந்தால் சரியாக இருந்திருக்கும். மோடியும் அமித்ஷாவும் ரத்தக் கறைகள் படிந்த கரங்களைக் கொண்டவர்கள். அவர்களைப்போய், கிருஷ்ணன், அர்ஜுனன் என ரஜினிகாந்த் ஒப்பிட்டிருப்பது, கிருஷ்ணனை கேவலப்படுத்துவதாகவே அர்த்தம் கொள்ளமுடியும்.
காங்கிரஸ் கட்சிக்கு எப்போதெல்லாம் சோதனைக் காலம் வருகிறதோ, அப்போதெல்லாம் தன்னுடைய நிலையிலிருந்து மாறி மிகப்பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறார் சோனியா காந்தி. அவர், காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒரு நல்ல ஆட்சியைக் கொண்டு வருவதற்கு முழுமையாக அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார்.” என்றார்.
மாணிக் தாகூரின் அரசியல் கருத்துகள், பேட்டிகளெல்லாம் சரிதான்! அதேநேரத்தில், தனக்கு வாக்களித்த மக்களின் குறைகளைக் களைய முயற்சிப்பதில் தற்போது காட்டுகின்ற இதே வேகம் எப்போதும் இருக்க வேண்டும்.