டிடிவி தினகரன் அணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் டிடிவி.தினகரன் மற்றும் அவர் அணியில் இருப்பவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைவார்கள்," ஜோதிடம் கணித்தவர் போலவே பேட்டியளித்துள்ளார் மதுரை ஆதீனம்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தில் மதுரை ஆதினத்திற்கு சொந்த சாட்சிநாதர் ஸ்வாமி ஆலயம் உள்ளது. அங்கு வந்திருந்த 292 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ.அருணகிரிநாத தேசிக பரமாச்சார்ய சுவாமிகளான மதுரை ஆதீனம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
எப்போதுமே ஆன்மீகத்திற்கு அப்பால், இந்திய, தமிழக அரசியலை பேசிபரபரப்பை உண்டாக்குவது மதுரை ஆதீனத்தின் வேலையாக இருக்கும், அந்த வகையில் தற்போது டிடிவி தினகரன் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணையும் என அதிரடி கிளப்பியுள்ளது ஆதினம்.
மதுரை ஆதீனம் கூறுகையில், " டிடிவி தினகரன் நல்ல திறமைசாலி அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி, அவரது வெற்றி இறைவன் கையில் தான் உள்ளது. மக்கள் அனைவரும் அதிமுக, பாஜக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுக தன்னை முறையாக அழைத்தால் பிரச்சாரம் செய்யவும் தான் தயார். சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் வராது, தொடர்ந்து அதிமுக தான் ஆட்சியில் நீடிக்கும், பொள்ளாச்சி சம்பவத்திற்கும் தேர்தலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. " என்று தனக்கே உரிய பாணியில் கூறினார்.
"எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிக்கு துதிபாடி புகழ்வதே மதுரை ஆதீனத்தின் வேலை. மற்ற ஆதீனங்கள் அரசியலைப்பற்றி வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். ஆனால் மதுரை ஆதினமோ சற்று அதிலிருந்து வேறுபட்டு அரசியல் மற்றும் சமூகம், என சகலத்தையும் கலந்துப் பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையான ஒன்றுதான். திமுக ஆட்சியின் போது கலைஞரை புகழ்ந்து தள்ளி ஜெயலலிதாவிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட கதைகளும் உண்டு. சபள சாமியார் நித்தியானந்தாவிடம், எதற்கோ சிக்கி சின்னாபின்னமாகிய கதைகளும் அவருக்கு உண்டு.
தற்போது எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி.தினகரனும் ஒன்று சேர்வார்கள் என்று புகழ்ந்து தள்ளியதோடு, பொள்ளாச்சி பாலியல் வண்கொடுமை விவகாரம், தேர்தலில் ஒன்றும் செய்யாது என பெண்ணியத்தை கொச்சைப்படுத்துவது போல் பேசியிருப்பதும், இதுவரை ஏந்த ஆதீனமும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக வாக்குகேட்டு வீதிக்கு வருகிறேன் என்று இதுவரை யாரும் கூறியதில்லை. ஆனால் மதுரை ஆதீனம் அதையும் செய்கிறேன் என்றுக்கூறுவது வேதனையளிக்கிறது. அவர் சார்ந்துள்ள ஆன்மீகப் பணியில் அவர் இதுவரை எந்த சாதனைகளையும் நிகழ்த்தியதில்லை, குறிப்பாக அவரது கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோயில் சிதிலமடைந்து பொதுமக்கள் வந்து செல்வதற்கும், வணங்குவதற்கும் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. அந்த காலத்தில் முன்னோர்கள் தேர் ஓட்டினார்கள். ஆனால் இன்று அந்த தேர் நொறுங்கி புதராக மண்டிக் கிடக்கிறது. குளங்கள் புதர்மண்டிக்கிடக்கிறது. இப்படி அவரது நிர்வாகத்தில் இருக்கும் குளறுபடிகளை செய்ய முடியாத அவர், ஆன்மிகப் பணியை விட்டு, அரசியலில் வீதிக்கு,வீதி வந்து தேர்தலில் வாக்கு கேட்கிறேன். என்று கூறுவது வேதனையாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது என்கிறார்கள் திருப்புறம்பியம், கஞ்சனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் பக்தர்களும்.
மதுரை ஆதீனத்தின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை! என கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை!
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 21, 2019