மதுரை செல்லூர் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ஆங்காங்கே போக்குவரத்திற்கு நடுவில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. மதுரையின் சிறப்பை குறிக்கும் வகையில் சிலைகள் அமைக்கப்பட்டும் வருகிறது.
அதில் ஒன்று மதுரை செல்லூரில் கபடி வீரர்கள் அடங்கிய சிலையோடு சேர்த்து அமைந்துள்ள ரவுண்டானாவை திறந்து வைக்க அமைச்சர் செல்லூர் ராஜூ வந்திருந்து பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென கிரானைட் கற்கள் பதித்த பகுதிகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
அதில் ஆளும் கட்சியை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் அருகிலிருந்த சாக்கடையில் விழுந்தனர். இதில் அமைச்சரும் நிலை தடுமாற அவரை அங்கிருந்த போலீசார் கைத்தாங்கலாக காப்பாற்றினர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி பல்வேறு கட்டிட வேலைகளை செய்து வருகின்றன. இதை எடுத்த காண்ட்ராக்டர்களின் தரமற்ற வேலைப்பாடுகளால் இதுபோன்று நடந்து உள்ளது. இதில் ஆளும் தரப்பின் அமைச்சர் திறந்து வைக்கும் போதே நடந்த இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.