தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வருகின்ற 27ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவதாக திட்டமிட்டுள்ளது.
மாநிலம் தழுவிய இந்த போராட்டத்தில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்துவது, டீசல் மீதான வாட் வரியை குறைத்தல், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ‘தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தங்கள் முழுமையான ஆதரவு தெரிவித்திருந்தாலும், இது குறித்த எந்த தகவலும் வழங்கப்படாமல் உள்ளது.’ என்று தெரிவித்தனர்.
மேலும், ‘வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துவதற்கு அரசு யாரை எந்த நிறுவனத்தை நியமித்து இருக்கிறதோ அந்த நிறுவனத்திடமிருந்து மட்டுமே வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும் எனத் தெரிவித்திருப்பதும் அதற்கு அவர்கள் 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பதை கண்டித்தும் இந்தப் போராட்டம் நடக்கவிருக்கிறது.
ஒரு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ரூ.600 செலவாகிக் கொண்டு இருந்த இடத்தில் இன்று, ரூ.3,000 செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே, லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக ஏற்று இவற்றில் உள்ள பிரச்சனைகளை உடனடியாக களைய வேண்டும். திருச்சியில் மட்டும் சுமார் 1 லட்சம் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.