Skip to main content

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே நடந்த சோகம்!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
8th class student lost their life after not buying school bag

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர். உற்சாகமாக பள்ளிக்கு திரும்பிய மாணவ மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியைகள் மலர் கொத்து தந்து அன்புடன் உற்சாகமாக வரவேற்றார்கள். நன்றாக படித்து 100% தேர்ச்சி பெற வேண்டும் என்று மாணவிகளை ஆசிரியர்கள் வாழ்த்தி வகுப்பறைக்கு அனுப்பினார்கள்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் பழனி.  இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது மூத்த மகன் கிருத்திக் (13) காந்திநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் காலை பள்ளிக்குச் சென்று மாலையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவரது தந்தை வேலைக்கு சென்று விட்ட நிலையில் அவரது தாயார் மாடு மேய்க்க சென்று உள்ளார். அவனது சகோதரர்கள் இருவரும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

மாலை வீட்டுக்கு வந்து அவரது தாயார், வீட்டில் தனியாக இருந்த கிருத்திக்  அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சல்லிட்டுள்ளார். அவரின் கதறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள்  ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடல் கூறு ஆய்வுக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

8th class student lost their life after not buying school bag

இந்தச் சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஸ்கூல் பேக் வாங்கித்தரவில்லை எனச் சிறுவன் விரக்தியில் இருந்ததாக தெரியவந்தது. இது குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஸ்கூல் பேக் வாங்கி தரவில்லை எனக் கூறி எட்டாம் வகுப்பு மாணவன்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் பலி!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
youth passed away after falling into a ditch dug to build a bridge on the road

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேத்துவண்டை முதல் நெல்லூர் பேட்டை வரை புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே குடியாத்தம் சித்தூர் சாலையில் சித்தூர் கேட் அருகே பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று இரவு சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அர்ஜுன்(30) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்த அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் குடியாத்தம் டூ சித்தூர் சாலையில் தினமும் ஏராளமான கனரகம் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றதால் இந்த அசம்பாவிதம் நடந்ததாகக் கூறி உயிரிழந்த அர்ஜுன் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் சித்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். விபத்துகள் ஏற்படாவதவாறு ஒப்பந்த நிறுவனம் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அதிகாரிகள் சரியென்ற பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது.

Next Story

‘கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ - வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Vellore Collector warns that action will be taken against sale of illicit liquor

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ள சந்தையில் மது விற்பனை தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 57 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக மாவட்டம் முழுவதும் மற்றும் அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தீவிர சாராயத் தேடுதல் வேட்டை  நடைபெற்று வருகிறது. இதில் பேரணாம்பட்டு சாத்கர் மலைப்பகுதியில் வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் நேரடியாக களத்தில் இறங்கி சோதனை மேற்கொண்டு தீவிரம் காட்டி வருகிறார்.

மேலும் மலைப்பகுதியில் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கள்ளச்சாராய ஊரல்கள் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்களை கண்டுபிடித்து  அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

அப்போது பேசிய ஆட்சியர் சுப்புலெட்சுமி, "வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி மாவட்டத்திலுள்ள 20 உள்வட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் 20 குழுக்களும், மாவட்டத்திலுள்ள 5 மலைக் கிராமங்களுக்கு 1 குழு வீதம் 5 குழுக்களும் என மொத்தம் 25 குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

மலைக் கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வனத்துறையின் சார்பில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பினை தீவிரப்படுத்த வேண்டும். காவல்துறையின் சார்பில் வனத்துறையினருக்கு சோதனை சாவடிகளுக்கு தேவையான முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். மேலும் வனத்துறையின் சார்பில் வனப்பகுதிகளில் அவ்வப்பொழுது திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

போதைப் பொருட்களின் விற்பனை கண்டறியப்பட்டால் தொடர்புடைய வணிக நிறுவனம் அல்லது கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்துதுறை அலுவலர்களும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தங்களுக்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், "என எச்சரிக்கை விடுத்தார்.