நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில், ஒடிசா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது.
முதல்வராக பொறுப்பு வகித்து வந்த பிஜு பட்நாயக் மறைவுக்கு பிறகு, அவருடைய மகன் நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கினார். பின்பு கடந்த 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் அமோக வெற்றி பெற்று அம்மாநில முதல்வரானார். அதனைத் தொடர்ந்து, ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்று 24 ஆண்டுகளாக முதல்வராக பணியாற்றி வந்த நவீன் பட்நாயக், மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
அதன்படி, மொத்தம் 147 இடங்களில் 78 இடங்களிலும் பா.ஜ.க கைப்பற்றி முதல்முறையாக ஆட்சியை பிடித்தது. பிஜு ஜனதா தளம் 51 இடங்களையும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களிலும், சுயேட்சை 1 இடங்களிலும் வென்றது. அதே போல், மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வெற்றி பெற்றியிருந்தது. பிஜு ஜனதா தளம் ஒரு தொகுதியைக் கூட பெற முடியாமல் படுதோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில், பா.ஜ.கவுக்கு எங்களின் ஆதரவு இல்லை என்று அறிவிப்பை நவீன் படநாயக்கின் பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது.
கடந்த 2000, 2004ஆம் ஆண்டுகளில் பா.ஜ.கவோடு பிஜு ஜனதா தளம் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது வெற்றி பெற்றது. கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவை, சட்டமன்றத் தேர்தலின் போது பிஜு ஜனதா, பா.ஜ.க கூட்டணி உடைந்தது. இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரச்சனையின் அடிப்படையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவை பிஜு ஜனதா தளம் கடைபிடித்து வந்தது.
இதனிடையே, நடைபெற்று முடிந்த தேர்தலில் பிஜு ஜனதா தளம் படுதோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில், தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை பிஜு ஜனதா தளம் எடுத்துள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது, ‘நாடாளுமன்றத்தில் இனி பா.ஜ.கவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்கட்சி மட்டுமே’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.