தாளவாடி அருகே வனப்பகுதி ஓரத்தில் சாக்கு மூட்டையில் மனித எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாப்புரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுபற்றி உடனடியாக தாளவாடி காவல்துறைக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது.
மனித எலும்பைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த மனித எலும்புகள் யாருடையது? யாராவது கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.