Skip to main content

மா.செ. ராஜினாமா..! விழுப்புரத்தில் தடதடக்கும் தினகரன் கட்சி .! 

Published on 25/09/2018 | Edited on 25/09/2018


 

T. T. V. Dhinakaran



விழுப்புரம் மாவட்ட  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கலக குரல் வலிமையடைந்து வருகிறது.
 

அ.தி.மு.க.விலிருந்து தினகரனை விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் அனைவரும் முடிவெடுத்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் சலசலப்புகள் கொஞ்சம் அதிகமாகவே எதிரொலித்த நிலையில், மாவட்டத்திலுள்ள  ஞானமூர்த்தியும், பாலசுந்தரமும் தினகரனோடு  இணைந்து செயல்பட்டனர். 


இதனால் செம உற்சாகமடைந்து  விழுப்புரம் மாவட்டத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சித்தார் தினகரன். அ.ம.மு.க.வை ஆரம்பித்த போது, விழுப்புரம் மாவட்டத்தை  இரண்டாக உடைத்து தெற்கு மாவட்டத்தின் செயலாளராக ஞானமூர்த்தியையும், வடக்கிற்கு பாலசுந்தரத்தையும் நியமித்தார் தினா! 
 

கட்சியை பலப்படுத்த ஓடியாடி வேலை செய்தார் ஞானமூர்த்தி. கள்ளக்குறிச்சி சிட்டிங் எம்.எல்.ஏ. பிரபு, தினகரனோடு ஐக்கியமானபோது, அவரை மா.செ.வாக்க வேண்டிய நிர்பந்தம் தினகரனுக்கு ஏற்பட்டதால், தெற்கு மா.செ.பதவியிலிருந்து ஞானமூர்த்தியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பிரபுவை மா.செ.வாக நியமித்தார் தினகரன். 
 

இதனைக்கண்டு தினகரன் மீது கடும் அதிர்ப்தியடைந்தார் ஞானமூர்த்தி. இதனையறிந்த தினகரன், ஞானமூர்த்தியை சமாதானம் செய்ததோடு,  வடக்கு மாவட்டத்திலிருந்து வானூர், விக்கிரவாண்டி தொகுதிகளையும், தெற்கு மாவட்டத்திலிருந்து உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் தொகுதிகளையும் பிரித்து புதிதாக விழுப்புரம் மத்திய மாவட்டம் என உருவாக்கி அதன் செயலாளராக நியமித்தார். 
 

இதில் திருப்தியடைந்த ஞானமூர்த்தி, பழையபடி பூத் கமிட்டி அமைப்பதிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையிலும் சுறுசுறுப்புக் காட்டினார். இந்த நிலையில், திடீரென மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக தினகரனுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார் ஞானமூர்த்தி. 
 

இந்த சம்பவம் அ.ம.மு.க.வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன்? எதற்கு? என ஆராயாமல், அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தினகரன், மத்திய மாவட்ட பொறுப்பாளராக, கட்சியின் அமைப்பு
செயலாளராக இருந்து வரும் ரிஷிவந்தியம் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜீவை நியமித்திருக்கிறார்.
 


அவரது ராஜினாமா பரபரப்பாக எதிரொலிக்கும் நிலையில், இதுகுறித்து தினகரன் கட்சியினரிடம் விசாரித்தபோது, "ஞானமூர்த்தியை மா.செ.வாக தினகரன் நியமித்திருந்தாலும் மாவட்டத்திலிருக்கும் சிலரின் அழுத்தங்களுக்குப் பணிந்து ஞானமூர்த்தியை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. மேலும், மாவட்டத்தில் உள்கட்சிப் பிரச்சனையை உருவாக்க முயற்சிக்க, இதற்கு காரணமானவர்கள் குறித்து தினகரனிடம் புகார் வாசித்தார் ஞானமூர்த்தி. 
 

ஆனால் இவரது புகார்களை தினகரன் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஞானமூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் வெறுத்துப் போனார்கள். அதன் பிறகு பலமுறை ஆலோசித்தார் ஞானமூர்த்தி. பதவியிலிருந்து ராஜினாமா செய்யுங்கள். மரியாதை இல்லாத இடத்தில் நமக்கு என்ன வேலை? என அவரது ஆதரவாளர்களும் அவரது சமுதாயத்தினரும் வலியுறுத்திய நிலையில் தான் ராஜினாமா முடிவை எடுத்தார் அவர். 
 

அவரது விலகல், அ.ம.மு.க.விற்கு பெரிய பின்னடைவுதான். இப்போதெல்லாம் எடுப்பார் கைப்புள்ளைப் போல் அரசியல் செய்கிறார் தினகரன். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கட்சி கலகலத்து விட்டது" என்கின்றனர் அ.ம.மு.க.வின் மேலிட நிர்வாகிகள். 
 

இந்த சூழலில், ஞானமூர்த்தியின் ராஜினாமா விவகாரத்தால், விழுப்புரம் அ.ம.மு.க.வில் கலகக் குரலை உரத்து எழுப்புகின்றனர். இதனால் மாவட்டத்தில் தினகரனின் கட்சி தடுமாறத் துவங்கியிருக்கிறது.
 

இதனை அறிந்த அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், ஞானமூர்த்தியை தாய்க்கழகத்தில் இணைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றனர்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.