90களில் தொலைக்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பிரபலமானவர் அப்துல் ஹமீது. இலங்கையைச் சேர்ந்த அப்துல் ஹமீது உயிரிழந்துவிட்டதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது. இது பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தான் உயிரோடு இருப்பதாக இலங்கையிலிருந்து அப்துல் ஹமீத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''மாண்டவன் மீண்டு வந்து பேசுகின்றானே என்று சிலர் வியந்து நோக்கக்கூடும். நேற்று இலங்கை நேரப்படி நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்தச் செய்தியைக் கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைப்பேசியில் என்னை அழைத்து என் குரலைக் கேட்டு பின்பு தான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். அதிலும் சிலர் என் குரலைக் கேட்டதும் கதறி அழுததைக் கேட்டு என்னால் தாங்க முடியவில்லை. எத்தனையோ ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை என நினைத்துக் கொண்டேன்.
நேற்று இலங்கை பத்திரிகையில் நான் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். அந்தக் கட்டுரையின் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது 'மரணம் மனிதனுக்கு தரும் வரம். அவனைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளை எல்லாம் மறக்கச் செய்து நல்ல பக்கத்தை மட்டும், நல்ல நினைவுகளை மட்டும் நிலைநிறுத்திப் பேசி மகிழ்வது' என அந்த வரிகள். அப்படி ஒரு அனுபவம்தான் எனக்கு கிடைத்திருக்கிறது. முதல் அனுபவம் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது என்னையும் என் மனைவியும் உயிரோடு கொளுத்தி எரித்து விட்டார்கள் என்றும் நான் இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. இங்கு மட்டுமல்ல தமிழகத்திலும் பரவி, பத்திரிகைகளிலும் பரவி, கேரளத்தில் மலையாள பத்திரிகைகளிலும் வெளிவந்தது. அதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் யூடியூப் நடத்தும் ஒருவர் அதிக பணம் வருமானம் ஈட்ட வேண்டும் என்று பேராசையில் என்னுடைய படத்தை போட்டு பிரபல டி.வி தொகுப்பாளர் மரணம்; கதறி அழுதது குடும்பம் என்ற செய்தியைப் பதிவு செய்திருந்தார்கள். அது இரண்டாவது முறை. இது மூன்றாவது முறை. மூன்று முறை நான் உயிர்த்தெழுந்திருக்கின்றேனா என்று நகைச்சுவையாக எண்ணத் தோன்றுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.