கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணையானது நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கில் இதுவரை ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சின்னதுரை என்பவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று இரவு முதல் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கண்ணுக்குட்டி விஜயா தாமோதரன்
கடந்த 17ஆம் தேதி பாண்டிச்சேரியை சேர்ந்த மாதேஷ் என்பவரிடமிருந்து சின்னதுரை மெத்தனாலை வாங்கி வந்துள்ளார். சின்னதுரையிடம் இருந்து 4 டியூப்புகளில் அடைக்கப்பட்ட மொத்தம் 60 லிட்டர் மெத்தனாலையும், 100 சிறிய பாக்கெட்டுகளையும் கண்ணுக்குட்டி என்கின்ற கோவிந்தராஜ், வாங்கி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. கோவிந்தராஜ் வைத்திருந்த மெத்தனாலை அவருடைய தம்பி தாமோதரன் குடித்து பார்த்து அது காலாவதியானது எனக் கூறி இருக்கிறார், ஆனால் இருந்த போதிலும் இது விலையுயர்ந்த மெத்தனால் எனக்கூறி சின்னதுரை விற்பனை செய்துள்ளார்.
சின்னத்துரையிடம் அடிக்கடி மெத்தனாலை கண்ணுக்குட்டி வாங்கி வந்த நிலையில் எப்பொழுதுமே முழு தொகையை கொடுத்து வாங்குவதுதான் வழக்கம். ஆனால் கடந்த 17ஆம் தேதி முன்பணம் மட்டும் கொடுத்து மெத்தனாலை வாங்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாண்டிச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் ஆந்திராவில் இருந்து மொத்தமாக மெத்தனாலை வாங்கி வந்து பாண்டிச்சேரியில் வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.
சின்னதுரை
இதில் கள்ளச்சாராயத்தை விற்ற நபராக கருதப்படும் கண்ணுக்குட்டி குடிப்பழக்கம் இல்லாதவர் என்பதும், அவருடைய தம்பி தாமோதரன் தான் எப்பொழுதும் குடித்து பார்த்து வாங்குவார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சின்னதுரையின் நண்பரான மதன்குமார், ஜோசப்ராஜா ஆகிய இருவரையும் மெத்தனால் விற்பனை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மதன்குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு ரெட்டியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைக்கு சென்று சமீபத்தில் வெளியில் வந்திருப்பது தெரிய வந்தது. சின்னதுரையின் மற்றொரு நண்பரான ஜோசப்ராஜா என்பவர் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.