Skip to main content

கூடாரம் காலி; அடையாளத்தை இழக்கும் மாஞ்சோலை - அபலைகளுக்குக் கைகொடுக்கும் முதல்வர்!

Published on 22/06/2024 | Edited on 24/06/2024
plight of the people of Manjolai Estate

தலைமுறை வழியாய் 95 வருடங்கள் நெல்லை மாவட்டத்தின் அம்பை பகுதியின் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பி.பி.டி.சி. கம்பெனிக்கு இரவுபகல் பாராது விசுவாசமாய் உழைத்தவர்கள். அப்படிப்பட்ட மக்கள் அடுத்த வேளை உணவுக்கு, அவர்கள் தங்கள் பிள்ளைகளோடு என்ன செய்வார்கள் என்ற நன்றி உணர்வு இம்மியளவு கூட இல்லாமல் கடுமையாக நடந்து கொண்ட கார்ப்பரேட் கம்பெனி குத்தகை முடிவதற்கு இன்னும் நான்கு வருடங்கள் இருந்தபோதும் ஜூன் 17 முதல் கம்பெனி மூடப்படுகிறது.

plight of the people of Manjolai Estate

தொழிலாளர்களுக்கு வேலையில்லை. ஆரம்பத்தில் 25 சதவிகிதம் ஓய்வூதியத் தொகை. வீட்டைக் காலி செய்து சாவியை ஒப்படைத்தால்தான் மீதமுள்ள தொகை என்று ஐம்புலன்களையும் மூடிக்கொண்டு அறிவித்துவிட்டது. பிரபஞ்சத்தில் நடந்திராத கொடுமை.

எங்களின் திடீர் நிலைமைக்கேற்ப உதவுங்கள். நேரமே கொடுக்காமல் வெளியிட்ட அறிவிப்பால் சுருண்டு கிடக்கிறோம் என்று கார்ப்பரேட்டிடம் கெஞ்சியும் மன்றாடிய தொழிலாளர்களுக்கு பதிலில்லை. கண்ணீரே அவர்களின் வழிப்பாதையாக இருந்தது. கத்தி மீதிருக்கும் இந்த 3000 தொழிலாளர் குடும்பங்களின் நிலைமைகளை அரசு வரை கொண்டு சென்ற அரசியல் கட்சியினர் அம்மக்களின் நெருக்கடிக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எங்களுக்கு மறுஜென்மம் அளியுங்கள் என்று தொழிலாளர்களும் அரசிடம் நிலைமையை தெளிவாக்கினர்.

plight of the people of Manjolai Estate

அதே சமயம் கார்ப்பரேட்டின் ‘வெளியேறு’ என்ற தகவலையறிந்த அரசும் உரிய நடவடிக்கையிலிறங்கியது. தாமதிக்காமல் இம்மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின் அத்தனை குடும்பங்களுக்கும் உதவும் வகையில் இருப்பதற்கு வீடு, நிலம், வேலை, கல்வியைத் தொடர்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்கிற வகையில் அவர்களின் விருப்பத்தைத் தெரிவிக்க அத்தனை பேருக்கும் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மூலம் விண்ணப்ப படிவங்களை விநியோகித்து நிவாரணப் பணிகளை விரைவு படுத்தியிருக்கிறார். முதல்வரின் நடவடிக்கைகள் அம்மக்களின் நம்பிக்கையை வலுவாக்கியிருக்கிறது.

plight of the people of Manjolai Estate

ஆனாலும் தற்போதைய சூழலில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுகிற வகையில் தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அதுவே எங்களின் குடும்பங்களை மேம்படுத்தும் என்று கோரிக்கை வைத்ததுடன், முதல்வர் தங்களுக்கான இந்த கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இன்னமும் அம்மக்களின் மனதில் நிலை கொண்டிருப்பதை அறியமுடிந்தது.

plight of the people of Manjolai Estate

வனத்துறையினர் மூலம் விநியோகிக்கப்பட்ட அந்த விண்ணப்பப் படிவத்தில், தேயிலை பறிப்பவரா, மேற்பார்வையாளரா அல்லது மற்ற வேலைபார்ப்பவரா, அவர்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகள், எந்தப் பஞ்சாயத்தில் வசிப்பவர், குடும்ப அட்டை எண், எந்த வருடத்தில் தேயிலை தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தார், குழந்தைகளின் எண்ணிக்கை கல்வியின் நிலை, விருப்ப ஓய்வூதிய திட்டத்தில் கையெழுத்திட்டவரா, அரசிடமிருந்து எந்த விதமான உதவியை எதிர்பார்க்கிறார், நிலமாக உதவியா, அரசு ஒதுக்கீடு செய்யும் வீடா? இங்கிருந்து வெளியே சென்ற பிறகு எந்த ஊரில் அல்லது கிராமத்தில் குடியேற விரும்புகிறார்கள் உட்பட அனைத்து விபரங்களும் பூர்த்தி செய்து விரைவாகக் கேட்கப்பட்டுள்ளது. அம்மக்களின் மறு வாழ்வே முக்கியம் என்றும் அதிகாரிகளின் தரப்பிலும் சொல்லப்படுகிறது.

நாம் மாஞ்சோலை, ஊத்து, குதிரைவெட்டி எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வந்ததில் அங்கு நடப்பவைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மன நிலைபற்றியும் நுணுக்கமாகவே கேட்டறிந்ததில், தொழிலாள மக்களின் மனதில் இனம் புரியாத அச்சமும் பதட்டமுமிருப்பதைக் காண முடிந்தது. கம்பெனியின் திட்டவட்ட அறிவிப்பின்படி பல தொழிலாளர்கள் தங்களின் இருப்பிடங்களைக் காலி செய்து கொண்டிருந்தபோது கூட அவர்களே அறியாமல் கண்ணீர் பொத்துக் கொண்டு கிளம்பியது நெருடலாக இருந்தது.

plight of the people of Manjolai Estate
துரைப்பாண்டியன்

“எதிர்ப்பாக்காத அறிவிப்ப சொல்லிருச்சி கம்பெனி. பித்துப் புடிச்சுப் போயி நிக்கோம்யா. இத்தன வருஷமா இதே வேலையச் செஞ்சு பழக்கப்பட்ட நாங்க வேற தொழில செய்ய முடியுமா? மனசும் ஒடம்பும் ஒத்துழைக்குமா தெரியல. ஆனைமுடி, வால்பாறை எஸ்டேட்டுக்கு வாங்கன்றாக. அங்க அத்தன சுலபமா குடி பெயரமுடியாதுய்யா. அதனால தாம் இத அரசு ஏத்து நடத்துனா எங்களுக்கு உசுரு கெடச்சமாதிரின்றோம்யா...” என்றார் தளர்ந்த குரலில் குதிரைவெட்டி எஸ்டேட் தொழிலாளியான துரைப்பாண்டியன்.

plight of the people of Manjolai Estate
சமுத்திரக்கனி

மாஞ்சோலையின் சமுத்திரக்கனியோ பதறுகிறார். “நா பொறந்தது வளர்ந்தது வால்பாறை எஸ்டேட்ல தான். அங்க கல்யாணம் முடிஞ்சி 23 வயசுல இங்க வந்தேம்யா. 24 வருஷமா இங்க வேல பாத்து வாரேன். எங்க குடும்பத்து பூர்வீகம் கடையநல்லூர். வால்பாறையிலயும் இங்கயும் ஒரே மேனேஜ்மெண்ட் தான். காலி பண்ணுங்கன்னு கம்பெனி திடீர்னு சொன்னதுனால இனிமே என்ன பண்றதுன்னு தவிப்பில இருக்கோம். கம்பெனி கூட எங்க கிராஜூட்டி கணக்க சரியா சொல்லல. இனிமே எங்க புள்ளைங்க வாழ்வாதாரம் என்னாகுமோன்னு தெரியல. ஏற்கனவே நடக்குற தேயில தொழில்தான. அரசாங்கம் என்னயப் போல தொழிலாளிகளுக்கு எது அவசியம்னு நல்ல முடிவு எடுக்கும்ற நம்பிக்கை மட்டும் எங்கள விட்டுப் போகல..” என்றார் திடமாக.

ஏற்றுக் கொள்ள சிரமப்படுகிற புதிய சூழலை உருவாக்குவதை விட பழகிப் போன வாழ்வாதாரத்தை சீர் படுத்துவதே மேல், என்பதே மாஞ்சோலையின் மனவோட்டமாக இருக்கிறது.

 

Next Story

சாத்தூர் வெடிவிபத்து; உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
mk stalin announces relief to families of Chatur crackers victims

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்ப்பட்டி பகுதியில் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 20 அறைகள் கொண்ட இந்த ஆலையில், இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமான நிலையில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்புப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இந்த விபத்தில் அச்சங்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(42), சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி(44), சந்திரப்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார்(44), மோகன்(50) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலர் விபத்தில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பட்டாசுக்கு ரசாயன மூலப்பொருள் கலவை கலக்கும் பணி செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பம்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

Next Story

கோடநாடு விவகாரம்; சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
mk stalin said So far 268 witnesses have been examined in Kodanad case

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வருகிறது. அதன்படி மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரம் இன்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை ஆய்வு செய்தால் 221 தொகுதிகளிலும் திமுக வென்றுள்ளது. 2026இல் வெற்றிபெற்றுடுவோம் என்ற மமதையில் கூறவில்லை, மனசாட்சிப்படியே கூறுகிறேன். 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம். 

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் பணியிட மாற்றம், காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் அரசின் நடவடிக்கைகள் போதவில்லை எனக்கூறுவது தோல்வியை மறைக்கும் முயற்சி. ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கூட்டத்தில் பேசியபோது இனி கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அல்லது அதனால் எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்தான் பொறுப்பு. அதனால் கடும் நடவடிக்கையை எடுங்கள் என்று கூறியிருக்கிறேன். 

கள்ளச்சாராயம் போன்றே போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டவர்களுடைய வங்கிக் கணக்குகளை முடக்கி, சொத்துகளைப் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது. அரசு எதையும் மறைக்க வில்லை; முழுமையாக விசாரித்து வருகிறது.

கோடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இன்டர்போல் உதவியுடன் விசாரித்து வருகிறோம். தமிழ்நாடு சட்ட ஒழுங்கை காப்பதில் வெற்றிகரமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் காவல்துறைக்கான 190 அறிவிப்புகளில் 179 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றுபவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

தமிழ்நாடு இன்று இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்ந்துவருகிறது. தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உட்கட்டமைப்பு, மனித வளர்ச்சி குறியீடு என எல்லா வகையிலும் வளர்ச்சியடைந்துள்ளது.” என்றார்.