கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்கா, நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்ட்டது. இதற்காக தமிழியக்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.கே சேகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்நிகழ்வில் தொல்.திருமாவளவன் பேசுகையில் “அண்ணன் விஐடி நிறுவனர், வேந்தர், தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எவ்வளவு பொறுப்புணர்வோடு பணியாற்றி வருகிறார் என்பதை நாமும், நாடும் அறியும். இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணாவால் அடையாளம் காணப்பட்ட அறிஞர். பெரியார், அண்ணா போன்றோரால் ஈர்க்கப்பட்ட, சமூக நீதி அரசியலையும், தமிழ் இயக்கத்தையும் உறுதியாக பாதுகாத்து வருபவர். இன்று அவர் ஒரு கல்வி தந்தையாக அறியப்பட்டாலும், அரசியலில் பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கிறார் என்பதை எனது பார்வையில் மேலோங்கி நிற்பதாக நினைக்கிறேன்.
வெறும் வேடிக்கை பார்க்காமல், மொழி உணர்வு, இன உணர்வு பேச்சோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கு பணியாற்றக் கூடியவர். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று பணியாற்றி வருகிறார். அதனால்தான் தமிழ் இயக்கம் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கி, தமிழ் தேசிய களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற அனைவரையும் ஒன்றினைப்பதற்கான பணியைச் செய்து வருகிறார். கட்சி அடிப்படையில் பலர் சிதறி கடந்தாலும், அனைவரையும் ஒரு மேடையில் இணைப்பதற்கான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். பெரியார் கருத்து இந்த மண்ணில் மேலும் செழுமை பெற வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.
தமிழ்நாட்டில் பெரியார் அரசியலுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு எதிரானவர்கள், இங்கு காலூன்ற பார்க்கிறார்கள், அவர்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது, என்று சொன்னார். அதிமுக, திமுக போன்ற கட்சிகளைப் பலவீனப்படுத்துவது, ஆபத்தில் முடிந்துவிடும், பெரியாரின் கருத்துக்கும் பேராபத்தாக முடிந்துவிடும், என்று சொன்னவர். அதற்கான பல விசயங்களை என்னிடம் பகிர்ந்துக்கொண்டார். அவரது அனுபவங்களைச் சொன்னார். மக்கள் நலக்கூட்டணி உங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கானதாக இருக்கலாம், ஆனால் மறுபரிசீலனை செய்யுங்கள், வாக்கு சிதறி விடக்கூடாது, என்றார். இதை அவர் சொல்லியிருக்க தேவையில்லை. அவர் திமுக மற்றும் அதிமுக-வுக்காக பணியாற்றவில்லை. அவரது கவலை என்னவென்றால், தமிழகத்தில் தமிழ் அரசியலுக்கு எதிரான சக்திகள் இங்கு காலூன்றி விடுவார்களோ என்ற கவலை. சனாதான சக்திகள் இங்கு வந்துவிடுவார்களோ, என்ற கவலை அவருக்கு. அவர் சொன்னது பற்றிப் பலமுறை பலரிடம் பகிர்ந்திருக்கிறேன். அதன் பிறகு காவிரி நீர் பிரச்சனைக்கு இன்றைய தமிழக முதல்வர், அன்றைய எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் ஸ்டாலின் அழைத்த போது, எந்தவித ஆச்சரியமும் இன்றி அவருடன் கைகோர்த்தோம், இன்று தொடர்ந்து அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் எங்கள் கூட்டணிக்கு பல வெற்றிகளைக் கொடுத்து வருகிறார்கள்.
அவரது அரசியல் என்பது, மாநில உரிமைகள் பறிபோகக் கூடாது, மாநில சுயாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பாதிக்கப்பட கூடாது, என்ற புரிதல், அந்தத் தெளிவு, அந்தப் பொறுப்புணர்வு அண்ணன் இடத்தில் மேலோங்கி இருப்பதை நான் பார்க்கிறேன். கல்வியை வணிகமாக பார்க்காமல், அதன் மூலம் மக்களை முன்னேற்ற முடியும், சாதி கொடுமைகளில் இருந்து மக்களை மீட்க முடியும், என்ற புரிதல். உயர் கல்வியில் சாதனைப் படைத்திருக்கிறார் என்பதால்தான் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் தேசிய சராசரியில் 27 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. தமிழ்நாடு 47 சதவீதத்தில் இருக்கிரது. இதை ஒரு அரசு மட்டும் செய்ய முடியாது, விஐடி யும் சேர்ந்து செய்திருக்கிறது, என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இன்று விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலத்தில் இருந்து படிக்கிறார்கள், அதற்குக் காரணம், தரமான கல்வி வழங்குவதுதான். அதனால்தான் இப்படி ஒரு சிறப்பான பட்டம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இதைத் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் செய்திருக்க வேண்டும், ஆனால் எங்கே இருக்கும் நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு அண்ணனின் அருமை தெரிந்திருக்கிறது. அவருக்கு இந்தக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்கள், கல்வி தளத்தில் ஆற்றி வருகின்ற பணிகள் பாராட்டுக்குரியவை, போற்றக்கூடியவை என்றாலும், தமிழுக்காகவும், தமிழ் தேசியத்திற்கும் அவர் ஆற்றிக்கொண்டிருக்கின்ற பணிகள் மேலும் சிறப்பானவை. எங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் அண்ணன் வழியில் பணியாற்றி வருகிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் தேசியத்திற்காக பணியாற்றி வரும் கட்சி என்பதால்தான் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட போது என்னை அழைத்து பாராட்டினார். அதற்காக இந்த நேரத்தில் அண்ணன் விசுவநாதன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முன்னெடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணையாக இருக்கும் என்று சொல்லி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் சார்பில் அவரை வாழ்த்தி விடைபெறுகிறேன் என்றார்.