சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.
இதனையடுத்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், “பிரச்சினையை சபையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி இருக்கிறோம். கருப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். அதன்பிறகு அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் இந்த நடவடிக்கைய சபாநாயகர் அப்பாவு எடுத்துள்ளார்.
சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப்பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர், குறிப்பாக அதிமுக எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன்.
சபாநாயகரும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், மக்கள் பிரச்சனையைப் பற்றி சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு”எனத் தெரிவித்தார்.