சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (25.06.2024) காலை தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவைக்கு குந்தகம் விளைவித்ததால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது போடப்பட்ட வழக்கில் சிபிஐ மீது நம்பிக்கை இல்லை எனக் காரணம் காட்டி, அதற்குத் தடை உத்தரவு வாங்கிய வீராதி வீரரான எதிர்க்கட்சித் தலைவர்தான் தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். சட்டப்பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கின்றனர்.
நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் பெற்ற வெற்றி அதிமுக கண்களை உறுத்துகிறது. அதைத் திட்டமிட்டு திசை திருப்ப இது போன்ற பிரச்சனைகளை அதிமுகவினர் கிளப்புகின்றனர்” எனத் தெரிவித்தார். முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.