“யாரோ போஸ்ட் பாக்ஸ்ல நெருப்பை அள்ளிப் போட்டாங்களாம். அதை இவரு வேடிக்கை பார்த்தாராம். இவருக்கு தாமிரப் பட்டயம் வேணுமாம்.” -இந்தியன் திரைப்படத்தில் சுகன்யா பேசிய இந்த வசனத்தை ஏற்ற இறக்கத்தோடு ஒப்பித்துவிட்டு,
“வீட்ல புருஷன் திட்டினாராம். இந்தம்மா எறும்புப் பொடியோ எலி மருந்தோ சாப்பிட்டுச்சாம். ஜி.எச். போயி ட்ரீட்மென்ட் எடுத்தாங்களாம். இப்ப சரியாயிருச்சாம். ஆனா.. விருதுநகர்ல பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சின்னு எங்க டிபார்ட்மென்ட் ஆளுங்க பெரிசா பேசிக்கிடறாங்க..” என்று கமுக்கமாகச் சிரித்தார் அந்தக் காவலர்.
‘ஒரு பெண் எஸ்.ஐ.யின் தற்கொலை முயற்சியை காமெடி பண்ணுகிறாரே!’ ஆனாலும், ‘ஏதோ உள்விவகாரம்’ அறிந்தவர் போலும் என்று பொறுமை காத்ததில் அவரிடமிருந்து கிடைத்த தகவல்,
விருதுநகரில் காவல்துறையின் பிரிவு ஒன்றில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார் காவியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருடைய செல்போனில் கணவருக்கு கோபத்தை வரவழைக்கும் விதத்தில் நண்பருடன் எடுத்த ‘செல்ஃபிக்கள்’ இருந்திருக்கின்றன. அத்துறையில் அதே பிரிவில் பணிபுரிபவர்தான் அந்த நண்பர். துரோகம் ஏற்படுத்திய ஆத்திரத்தால், மனைவியை அடி பின்னியெடுத்துவிட்டார் கணவர். இந்த விவகாரம் அத்துறையினருக்கும், குடும்ப உறவுகளுக்கும் தெரிந்தால் என்னாவது? என்ற பயத்தின் காரணமாக, உயிரை மாய்த்துக்கொள்ள ஏனோதானோவென்று முயற்சித்திருக்கிறார் காவியா. குடும்பத்தினர், அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். உடல்நிலை தேறி டிஸ்சார்ஜானாலும் மனதளவிலான பாதிப்பிலிருந்து இன்னும் அவர் விடுபடவில்லையாம்.
தற்கொலைக்கு முயற்சித்தவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், துறையின் மானம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலோ என்னவோ, இதுவரையிலும் வழக்கு பதிவாகவில்லை. ‘அடுத்து என்ன செய்வது?’ என மண்டை காய்ந்துபோய் இருக்கிறது விருதுநகர் மாவட்ட காவல்துறை.