இந்தியாவின் பிரதமராக, மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு, தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மறுபக்கம், இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி.. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக, ராகுல் காந்தியை தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது. மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வானதை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்தார்.
இன்னொருபுறம், 18வது மக்களவைக்கான சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூன் 26ம் தேதியான இன்று நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த முறை, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்ததால்.. தனிப்பட்ட முறையில் பாஜக சபாநாயகரைத் தேர்வு செய்தது. ஆனால் இம்முறை பெரும்பான்மை இல்லாத பட்சத்தில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதால்.. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சுகளும் உள்ளன. அதற்காக, தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் அழுத்தம் தந்ததாகவும் செய்திகள் உலாவின.
முன்னதாக மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்த பிறகு.. ரேபரேலி மக்களவை தொகுதியின் உறுப்பினராகப் பதவியேற்றார். அப்போது, அரசியல் சாசன பிரதியைக் கையில் ஏந்தியவாறு ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறி பதவியேற்ற ராகுல் காந்தி, இறுதியில் இந்தியா வாழ்க! அரசியலமைப்பு வாழ்க! என முழக்கமிட்டார். அவர் பதவியேற்கும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஆரவாரக் கோஷங்களை எழுப்பி தங்களது பரிபூரண ஆதரவை வெளிப்படுத்தினர். பின்னர், சபாநாயகர் இருக்கைக்குச் சென்று அவருக்கு மரியாதை நிமித்தமாக வாழ்த்துக்கூறி ராகுல் கை குலுக்கினார். அப்போது, நாடாளுமன்ற பாதுகாவலர் எனச் சொல்லப்படும் நபர்கள் இருவர் நின்றனர். அதுவரை பதவியேற்ற ய யாரும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ராகுல் சக மனிதனை மதிக்கும் விதமாக, அவரிடம் வலியச் சென்று கைகுலுக்கினார். அவருடன் நின்ற மற்றொருவரிடமும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இதுதான் தலைமைப் பண்பு.. இவர்தான் தலைவர் எனப் பலரும் இந்த வீடியோ காட்சியைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
இதேபோல.. ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 17-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரசைச் சேர்ந்த, நாடாளுமன்ற அலுவல்களில் அதிக அனுபவம் பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவரான கொடிக்குனில் சுரேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும் கேரள மாநிலத்தின் மாவேலிக்கரை தொகுதியின் எம்.பி.யுமான அவர், எட்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை சபாநாயகர் தேர்வு குறித்து பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம். மக்களவை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் மரபு. எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். துணை சபாநாயகர் பதவி கொடுத்தால் மட்டுமே அரசுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு என்பதை ராஜ்நாத் சிங்கிடம் தெளிவாக கூறிவிட்டோம். மீண்டும் அழைப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால் அவர் இன்னும் அதை செய்யவில்லை. எங்கள் தலைவர் அவமதிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதியன்று முற்பகல் 11 மணிக்கு மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் நடத்தினார். பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா பெயரை பிரதமர் மோடி முன்மொழிந்தார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்பிக்கள் வழி மொழிந்தனர். இதேபோல இந்தியா கூட்டணி வேட்பாளர் பெயரை திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பின் முடிவில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா, லோக்சபா சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ ஆகியோர் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தனர். அப்போது, பிரதமர் மோடி இன்முகத்தோடு ராகுலை அழைத்தார். இதனால் சபை ஆர்ப்பரித்தது. பின்னர், அனைவரும் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்திப் பேசினர். ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவராகப் பொறுப்பேற்றது ஜனநாயகத்துக்கு புது ரத்தம் பாய்ச்சப்போகிறது எனக் காங்கிரசார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.