தமிழ்த் திரையுலகின் ரசிகர்கள் தாண்டி பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வெகு விமரிசையாக ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்கில் இன்று வெளியாகியுள்ளன. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது நிறைய திரைப்பிரபலங்களும் ரசிகர்களுடன் படங்களைக் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாநகரில் உள்ள வெங்கடேசா உள்ளிட்ட 8 தியேட்டர்களில் துணிவு படம் திரையிடப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள் இதனைக் கொண்டாடும் வகையில் நேற்று நள்ளிரவு பிரமாண்ட கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும், மேள தாளத்துடன் அஜித் படத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.மேலும், சுமார் 80 அடி உயர அஜித் கட்அவுட் ஒன்றை வைத்துள்ளனர்.
தியேட்டர்களில் பெரிய கட் அவுட், பேனர் வைக்கக் கூடாது, அதற்கு பால் அபிஷேகம் செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இதனை மீறி 80 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது குறித்து அஜித் ரசிகர்கள் கூறுகையில், "சுமார் 2 லட்ச ரூபாய் செலவு செய்து கட் அவுட்டை தனியார் இடத்தில் வைத்துள்ளோம். எங்கள் மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை" என்று தெரிவித்து உள்ளனர். இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய உதவி ஆணையர் நிவேதா லட்சுமி கூறுகையில், “காவல்துறையின் அனுமதியின்றி கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளோம். அகற்றவில்லை எனில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்” என்றார்.