Skip to main content

காலாவதியான உணவு தயாரித்த 8 அசைவ உணவகங்களுக்கு அபராதம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

 8 non-veg hotel shops fined for serving expired food

 

நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் கடந்த சனிக்கிழமை மதியம், மாலை, இரவு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உணவகத்தில் உணவு சாப்பிட்ட நாமக்கல் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டிலேயே உயிரிழந்தார். மேலும் அந்தத் தனியார் உணவகத்தில் உணவருந்திய அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் உட்பட 13 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அசைவ ஹோட்டல்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி தங்க விக்னேஷ் தலைமையில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாநகராட்சி, பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஹோட்டலில் மேற்கொண்ட சோதனைகள், தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 30 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி தங்க விக்னேஷ் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில் உள்ள அசைவ ஹோட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 15 ஹோட்டல்களும், சத்தியமங்கலத்தில் 8 ஹோட்டல்களும் பெருந்துறையில் 15 ஹோட்டல்கள் என 38 ஹோட்டல்களில் ஆய்வு நடத்தப்பட்டது. சிக்கனை சமைத்து தயார் செய்துவிட்டால் 5 முதல் 8 மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும் அதற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஆனால் இவர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் வைத்துள்ளனர். அவித்த முட்டை மற்றும் ஏற்கனவே சமைத்த சிக்கன்களை ப்ரிட்ஜுக்குள் வைக்கக்கூடாது எனப் பலமுறை தெரிவித்துள்ளோம். இதில் 30 கிலோ இறைச்சிகளை அழித்துள்ளோம். 8 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். 8 கடைகளுக்கு தலா ரூ. 2000 வீதம் ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம். பொதுமக்கள், தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை 94440 42322 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இன்று மாலை 2 -வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு நடத்தப்பட்டது.''  என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்