சேலம் மாநகரில், கடந்த இரண்டே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 5,171 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2.72 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. காவல்துறையினரின் கெடுபிடியால் இருசக்கர வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில், சாலை விபத்துகளில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் பலியாகின்றனர். விபத்துகளில் உயிரிழப்போரில் பெரும்பான்மையினர் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர்தான் அதிகம் என்பதும், ஹெல்மெட் அணிந்து செல்லும்போது தலைக் காயத்தினால் ஏற்படும் உயிரிழப்பு கணிசமாக குறைகிறது என்பதும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அவ்வப்போது காவல்துறையினர் கடுமை காட்டுவதும், தேர்தல் காலங்களிலும், அரசியல் தலைவர்கள் வருகையின்போதும் அந்த கெடுபிடியை ஓசையில்லாமல் தளர்த்தி விடுவதும் நடந்து வருகிறது.
எனினும், காவல்துறையினர், பொது நல அமைப்பினர் ஹெல்மெட் அணிவது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கரோனா காலக்கட்டத்தில் சேலம் மாநகரில் ஹெல்மெட் விவகாரங்களில் பெரிதாக அக்கறை காட்டாமல் இருந்த காவல்துறை, தற்போது ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் சேலம் மாநகரில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ஹெல்மெட் அணிவது அமலுக்கு வந்துவிட்டது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) சேலம் மாநகரில் 2,992 பேர் மீது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்களிடம் இருந்து மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், செவ்வாய்க்கிழமை (ஆக. 2) நடந்த வாகனத் தணிக்கையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2,179 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 1.23 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், கார் ஓட்டுநர்களும், பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சேலம் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கடந்த இரண்டே நாளில் 5,171 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2.72 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.