திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரி செயல்பட்டுவருகிறது. நேற்று இரவு பணி முடிந்து வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் ஜுவல்லரி ஊழியர்கள் கடையை திறந்து சென்று பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த வைர நகைகள், தங்க நகைகள் அனைத்தும் கொள்ளை போயிருந்தது. இதனையடுத்து நகைகள் திருடு போனது குறித்து கடை மேலாளர் திருச்சி காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர் மயில்வாகனம் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜுவல்லரியின் மேற்குப்புறம் சுவரில் துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே வந்தது தெரியவந்துள்ளது. ஆறுக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து இருக்கலாம் என தெரிகிறது. இதுபோன்ற சம்பவம் ஏற்கனவே சமயபுரம் திருச்சி டோல்கேட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி நடைபெற்ற கொள்ளைக்கும் ஒத்துப் போவதால் அதே கொள்ளையர்கள்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் மதிப்பு 40 கோடியிலிருந்து 50 கோடி வரை இருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.