சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(35). இவர் சென்னை மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்து வருகிறார். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டிற்கும், மறு மார்க்கமாக கிண்டி, சைதாப்பேட்டை வழியாக சென்னை கடற்கரைக்கும் தினமும் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் ராஜேஸ்வரி பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். மின்சார ரயில் இரவு 8 மணி அளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்ற போது ரயிலில் வந்து இறங்கிய பயணிகளுக்கு இடையே ராஜேஸ்வரியும் இறங்கியுள்ளார்.
அப்போது, ராஜேஸ்வரியை பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் தான் மறைத்து வந்திருந்த அரிவாளால் திடீரென்று அவரை வெட்டி விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இதை அறிந்த காவல்துறையினர் ராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். அதை தொடர்ந்து, ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவு மூலம் தப்பியோடிய மர்ம நபரை காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெண் கொலை தொடர்பாக 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். நாகவள்ளி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல், ஜான்சன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் நாகவள்ளி கொலை செய்யப்பட்ட ராஜேஸ்வரியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரையும் விசாரித்து வருகின்றனர்.