![pudukottai incident... Relatives Road Stir!](http://image.nakkheeran.in/cdn/farfuture/yRSEtiOdy-BMwqfgpCZ4mFHw27iTadXkiNnVLgzIC00/1644415599/sites/default/files/inline-images/dead_7.jpg)
புதுக்கோட்டையில் நான்காவது வகுப்பு பயிலும் மாணவன் மர்மமான முறையில் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நான்காம் வகுப்பு பயின்று வந்த மாணவர் ஒருவர் பள்ளிக்குச் சென்ற நிலையில், நேற்று மதியம் 2 மணி வரையில் பள்ளியில் இருந்துள்ளார். அன்றைய நாள் பிற்பகல் கழிவறைக்குச் சென்று திரும்பிய போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். மயக்கம் ஏற்பட்டதாக சகமாணவர்கள் ஆசிரியரிடம் தெரிவிக்க, பள்ளி ஆசிரியர் மாணவனின் தந்தையை தொடர்புகொண்டு தகவலை தெரிவித்துள்ளார். ஆனால் மாணவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் வீட்டுக்குக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஆலங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட பொழுது சிறுவனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாணவர் கொண்டுவரப்பட்டார். ஆனால் புதுக்கோட்டை மருத்துவமனையில், சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று காலை 10 மணியிலிருந்து அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு வந்த கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது உயிரிழந்த மாணவனின் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில் மாணவன் எவ்வாறு உயிரிழந்தார்? மாணவனின் உயிரிழப்புக்குக் காரணம் என்ன? உடனடியாக மாணவனை மருத்துவமனையில் ஆசிரியர்கள் சேர்க்கவில்லை. எனவே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து 3 மணி நேரத்திற்கு மேலாக மருத்துவமனை மருத்துவக் கல்லூரி அருகே புதுக்கோட்டை - தஞ்சை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்பொழுது வரை போராட்டம் தொடர்ந்து வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விஷம் தீண்டியதால் மாணவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. அந்த பள்ளியில் நல்ல பாம்பு ஒன்று அடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.