எந்த அரசு வேலை நடந்தாலும் ஒப்பந்தகாரர்கள் 20% முதல் 40% வரை அரசியல்வாதிகளுக்குக் கொடுத்துவிட வேண்டுமென்பது எழுதப்படாத சட்டமாக இருக்கின்றது. தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.அரசை சிவகங்கையில் கடுமையாக சாடினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான முத்தரசன்.
முன்னதாக, சாலை விபத்தில் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளரான கண்ணகியை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவகல்லூரி மருத்துவமனையின் நிலை அறிய ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
"சேலம் - சென்னைக்கு பல சாலைகள் இருந்தாலும் 8 மலைகளை குடைந்து அதனின் கனிம வளங்களை கொள்ளை அடிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சியே இந்த எட்டுவழிச்சாலை.! 8 வழிச் சாலை தொடர்பாக பொது கூட்டம் நடத்த கூட காவல்துறையும் நீதிமன்றம் அனுமதி மறுப்பது நல்லதல்ல..!
எந்தவேலை நடந்தாலும் 20% முதல் 40% வரை கமிஷன் பெறுவதை இந்த அரசு கடை பிடிக்கிறது. இதுவே தமிழகத்தின் தற்பொழுதைய எழுதப்படாத சட்டம்." என்றார். தொடர்ந்து "தற்போது மேகமலை காடுகளை அழித்து சாலை போட போவதாக செய்தி வருகிறது அப்படி வந்தால் தென்மாவட்டங்கள் பாதிக்கபட்டு வைகைக்கு தண்ணீர் வராது.! இது போன்ற செயல்களை தடுக்க இதற்கு எதிராக போராட்ட வியூகம் அமைப்போம்."என்றும் கூறினார்.