Skip to main content

4 கோடி பணம், 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளியைக் குவித்த பொறியாளர்...  

Published on 15/10/2020 | Edited on 16/10/2020

 

 4 crore cash, 3 kg gold, 10 kg silver hoarded engineer ...

 

வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் 500க்கும் அதிகமான தோல் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பொருள் உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் கழிவுநீர், கெமிக்கல் நீரை பாலாற்றில் விடுவதால் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது. தொழிற்சாலைகளின் பொறுப்பற்ற தன்மையைக் கவனத்தில் கொண்டு விவசாயிகள், பொதுநல அமைப்புகள் போராட்டத்துக்குப் பின் ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, பேரணாம்பட்டு நகரங்களில் அரசின் உதவியோடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இந்த கழிவுநீர் நிலையத்துக்கு கம்பெனிகள் நீரை அனுப்பும்போது, எவ்வளவு நீரை அனுப்புகிறார்களோ அதற்கு உண்டான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணம் செலுத்தாமல் இருக்க பாதி நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பும் 60 சதவித கம்பெனிகள், மீதி நீரை பாலாற்றில் இரவுகளில் திறந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட கம்பெனிகளைக் குறிவைத்து இந்த மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயல்பட்டு, லஞ்சமாக வாங்கி குவிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. அந்த குற்றச்சாட்டு 100 மடங்கல்ல 200 மடங்கு உண்மை என்பதை நிரூபித்துள்ளார் ஓர் உயர் அதிகாரி.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மைச் சுற்றுச்சூழல் பொறியாளராக வேலூர் மண்டல அலுவலகத்தில் பணியாற்றியவர் பன்னீர்செல்வம். வேலூர் மண்டலத்தில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வரும்.

இந்த மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகளைப் புதியதாகக் கட்டுதல், புதுப்பித்தல் போன்றவை இந்தத் துறையின் கீழ்தான் வரும். அப்படி புதியதாக தொடங்க, புதுப்பிக்க வருபவர்களிடம், ஒரு ஃபைல்க்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளார் பன்னீர்செல்வம். இதுபற்றிய புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்றது.

அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொறியாளர்கள் மூலமாகவே வாங்குவார் பன்னீர்செல்வம். அவர்கள் தான் இவரின் ஏஜென்ட். மாதம் இருமுறை இவருக்கான தொகையை அந்தந்த மாவட்டத்தில் இருந்து அதிகாரிகள் கொண்டு வந்து தந்துவிடவேண்டும். லஞ்சத்தை வசூல் செய்யவே மீட்டிங் எனச்சொல்லி வரவைப்பது வாடிக்கையாம்.

அந்த பணத்தையும் இவர் நேரடியாக வாங்கமாட்டார். இதற்காக வேலூரில் வாடகைக்கு எடுத்துள்ள வீட்டில் கொண்டுபோய் தரவேண்டும். அங்கே வசூலிக்க ஒரு ஊழியரை நியமித்துவிடுவாராம். அவர்கள் வசூலித்து இவர் வந்ததும் தந்துவிடவேண்டுமாம். 50 லட்ச ரூபாய் சேர்ந்ததும், அந்தப்பணத்தை ராணிப்பேட்டையில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு பாதுகாப்பாகக் கொண்டு போய் சேர்த்துவிடுவாராம். இதுபற்றி தெளிவாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தந்துள்ளனர். அவர்களும் இவரை கடந்த சில நாட்களாகக் கண்காணித்து வந்துள்ளனர்.  

 

Ad



அதனைத் தொடர்ந்து, வேலூர் காட்பாடி நகரில் உள்ள இவரது வாடகை வீட்டில் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி இரவு, வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஹேமசித்ரா தலைமையிலான அதிகாரிகள் நுழைந்தனர். 13, 14 மற்றும் 15-ஆம் தேதி காலை வரை அலுவலகம், வீடுகளில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் கட்டுக்கட்டாகப் பணத்தை எடுத்துள்ளனர்.


அதேபோல் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள அவரது சொந்த வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டிலும் கோடிகளில் பணத்தை எடுத்துள்ளனர். சுமார் 4 கோடி ரூபாய் பணம், 3.5 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக அத்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அறிக்கை அனுப்பினர். அந்த அறிக்கையின் அடிப்படையில் பன்னீர்செல்வத்தை அக்டோபர் 15-ஆம் தேதி மாலை, இடைக்கால பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்