ஈரோடு ரங்கம்பாளையம், ரயில் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். ஈரோடு மருந்தகத்தில் கேண்டின் எடுத்து நடத்தி வருகிறார். இவர் மனைவி கல்யாணி (38). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் ரெயில் நகரில் மற்றொரு வீதியில் உள்ள தன் தாயை ஸ்கூட்டியில் அழைத்துச் சென்று விட்டுள்ளார். அவரது தாய் ஸ்கூட்டியில் இருந்து இறங்கி வீட்டுக்குள் செல்லும்போது பைக்கில் வந்த 25 வயது மதிக்கத்தக்க இரு வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கல்யாணியை பிடித்து கீழே தள்ளிவிட்டு கல்யாணியின் கழுத்தில் இருந்த ஏழரை பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பைக்கில் வந்த இரு நபர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். மற்றொருவர் மாஸ்க் அணிந்திருந்தார். கல்யாணி அவரது வீட்டில் இருந்து கிளம்பும்போது முகவரி கேட்பது போல் அதே வாலிபர்கள் பேச்சு கொடுத்ததும் பின்னர் கல்யாணியை பின்தொடர்ந்து அவரது தாய் வீடு வரை சென்று அங்கு செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இது குறித்து பாதுகாப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் இந்த துணிகர நகை பறிப்பில் ஈடுபட்டதாக ஈரோடு மணல்மேல், டீசல் செட், பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆசிக் பாஷா (30), ஈரோடு மூலப்பாளையம், நாடார் மேடு பகுதி சேர்ந்த பாலாஜி (35), ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (40), ஈரோடு பெரிய தோட்டம் சென்னிமலை சாலை பகுதியை சேர்ந்த அம்ஜத்கான் (28) ஆகியோரை தாலுகா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.