தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையைத் தடுக்கவும், பதுக்கி வைத்திருப்பவர்களைக் கைது செய்யவும் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்டக் காவல்துறை எஸ்.பி.க்களுக்கும் மாநகரக் காவல்துறை ஆணையர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் (22.07.2021) சேலம் மாவட்டத்தில் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில் கஞ்சா, குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து சோதனை நடத்தப்பட்டது.
மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி, ஓமலூர், ஜலகண்டாபுரம், ஆத்தூர், தலைவாசல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த திடீர் சோதனையில், 31 இடங்களில் போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. போதை வஸ்துக்களை விற்பனை செய்ததாக 4 பெண்கள் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஹான்ஸ், பான் பராக், குட்கா, பான்மசலா உள்ளிட்ட 350 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.